``இந்தியாவிலேயே மோடியையும், பாஜகவையும் எதிர்க்கும் முதன்மையான முதல்வர் ஸ்டாலின்தான்” - கே.எஸ்.அழகிரி

நாட்டின் 75- வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மேற்கொண்டுள்ள பயணம் இன்று நெல்லைக்கு வந்தது. கட்சியின் மாவட்ட அலுவலகமான செல்லப்பாண்டியன் பவனுக்கு வந்த அவர் இந்திரா, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, ஜெயகுமார், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர் ரூபிமனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ``நாடு முழுவதும் வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை முன்வைத்து நடைப்பயணம் தொடங்கியுள்ளோம். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. பொதுவுடைமை கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசும் கே.எஸ்.அழகிரி

ஆனால் சுதந்திரத்துக்காகப் போராடாத ஆர்.எஸ்.எஸ் இயக்கம், சங்பரிவார்கள், ஜனசங்கம், பாஜக, இந்து முன்னணி சுதந்திரதினத்தை கொண்டாடுகிறார்கள், மோடி வீட்டிற்கு வீடு தேசியக் கொடியை கொடுக்கிறார், இது வரவேற்கத்தக்கது என்றாலும், 55 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகமான நாக்பூரில் இரண்டு முறை மட்டுமே தேசியக் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் இதுவரை சுதந்திர தினத்தைக் கொண்டாடாமல் புறக்கணிக்கக் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும்.

கச்சா எண்ணெய் விலை 120 டாலர் இருந்த போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று கச்சா எண்ணெய் 80 ரூபாய் விற்கும் நிலையில் மோடி அரசு 100 ரூபாயக்கு பெட்ரோலை விற்கிறது.

பீகாரில் நிதிஷ்குமார் ராஜினாமா செய்திருப்பதால் பிரிந்த நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள், அதனால், மகாராஷ்ட்ரா போன்ற சூழல் பீகாரில் ஏற்படாது. மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுக்கு பீகார் அரசியல் மாற்றம் முதல் வெற்றியாக அமையும்.

தமிழ்நாடு ஆளுநர் ரவி தனது மாளிகையில் வரம்பு மீறி மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் கூட்டங்களை நடத்துகிறார். இது தவறான செயல். அதைக் கண்டிக்கிறோம். புலனாய்வுத்துறை பின்புலம் உள்ள ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று அவர் நியமிக்கப்பட்டபோதே தெரிவித்தேன். எனது சந்தேகம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கே.எஸ்.அழகிரி

மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும் , பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க்கும் முதன்மையான வலிமையான முதல்வர் ஸ்டாலின் தான். தமிழகத்தில் மதவாத சக்திகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

இந்திய ஜனநாயகத்தைச் சீர்திருத்தம் செய்யும் வகையில் செப்டம்பர் 7- ம் தேதி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நடைப்பயணத்தைத் தொடங்கி காஷ்மீர் வரை செல்கிறார். 148 நாள்கள் பயணத்தில் 3500 கிமீ தூரத்தை 12 மாநிலங்களின் வழியாகக் கடக்கிறார். 2024- நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான முன்னோட்டமாக இது அமையும்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/MxeBoCS

Post a Comment

0 Comments