`சலவைத் தொழிலால் என்ன ஆபத்து?’ - வாழ்வாதாரத்தை இழந்த சக்கம்பட்டி மக்கள் போராட்டம் அறிவிப்பு

​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில், பாரம்பரியமாக நெசவாளர்களால் நெய்யப்படும் சக்கம்பட்டி சேலை மிகவும் பிரபலம். அதை தான் கவிஞர் வைரமுத்து முதல்மரியாதை படத்தில், `சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை’ என்ற பாடல் வரிகளை எழுதியிருப்பார்.

நெசவு

இவ்வாறு புகழ்பெற்ற சக்கம்பட்டியில் 2 ஆயிரம் நெசவாளர்கள் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். சக்கம்பட்டி பகுதியில் இந்த நெசவுத் தொழிலுக்கு அடுத்தப்படியாக ஆயிரக்கணக்கானோர் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டிகள் மற்றும் ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வேட்டிகளை சலவை செய்து, அதனை அயனிங் செய்து, பேக்கிங் செய்து சந்தைப்படுத்தி வருகின்றனர்.

​சலவை செய்யும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் வேலை செய்து வருகின்றனர். இதற்காக இந்தப் பகுதியில் 20 சலவை பட்டறைகள் உள்ளன. இந்நிலையில், சலவை பட்டறைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் மாசு ஏற்படுகிறது என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், சலவை பட்டறைகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து சலவை பட்டறைகளில் உள்ள மின்சார இணைப்பை துண்டித்து பட்டறைகள் மூடப்பட்டன.

போராட்டம்

இந்நிலையில் சலவைப் பட்டறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சலவை பட்டறை தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​இதுகுறித்து சக்கம்பட்டியைச் சேர்ந்த பரமேஸ்வரனிடம் பேசினோம். ``சாயப்பட்டறைகளால் தான் பாதிப்பு இருக்கிறதே தவிர சலவை பட்டறைகளால் பாதிப்பு ஏற்படப்போவது இல்லை. சலவைப் பட்டறையில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் மாசு ஏற்படுவதில்லை. வீட்டில் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் சாதாரண வேதிப் பொருள் தான் பயன்படுத்தப்படுகிறது.

பரமேஸ்வரன்

நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதால் கடந்த 2 மாதங்களால் சக்கம்பட்டியில் சலவைத் தொழில் நடக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சலவைப் பட்டறைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரசு அலுவலங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.



from Latest News https://ift.tt/89NcUuC

Post a Comment

0 Comments