தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது என்று சொல்லப்படுவது ஏன்?
பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஆதித்யன் குகன்...
தைராய்டு பாதிப்பை இருவகையாகப் பிரிக்கலாம். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் குறைவாகச் சுரப்பது `ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். மரபணு கோளாறுகளாலோ, புற்றுநோயாலோ உடல் முழுவதும் தைராய்டு சுரப்பு அதிகரித்துக் காணப்படுவது `ஹைப்பர் தைராய்டிசம்' எனப்படும்.
தைராய்டு பாதிப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முன், முதலில் அவர்களுக்கு உள்ளது மேற்குறிப்பிட்டவற்றில் எந்தவகை தைராய்டு பாதிப்பு என்பது தெரிய வேண்டும்.
தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என்பதன் அளவுகள் பரிசோதிக்கப்பட வேண்டும். அதையடுத்து ஆறு மாதங்களுக்கு தைராய்டு பாதிப்புக்கான மருந்துகள் எடுத்துக்கொண்டு, அது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அப்படி தைராய்டு சுரப்பு அளவுகள் ஏற்ற, இறக்கமின்றி இருப்பது தெரிந்தால் ரத்த தானம் செய்யலாம்.
யாரெல்லாம் ரத்த தானம் செய்யக் கூடாது?
புதிதாக தைராய்டு பாதிப்பைக் கண்டறிந்தவர்கள், அதற்கான பரிசோதனைகளை முழுமையாக முடிக்காத நிலையில் ரத்த தானம் செய்யக் கூடாது.
தைராய்டு புற்றுநோய் உள்ளவர்களும், வேறு ஏதேனும் புற்றுநோய் இருப்பவர்களுக்கு தைராய்டு பாதிப்பும் இருக்கும் நிலையில் அவர்களும் ரத்த தானம் செய்யக் கூடாது.
அடுத்து தைரோடாக்சிகோசிஸ் (Thyrotoxicosis) என்றொரு நிலை உண்டு. உடலில் தைராய்டு சுரப்பின் அளவு மிக அதிகமாக உள்ள நிலை இது. இதனால் பாதிக்கப்பட்டவர்களும் ரத்த தானம் செய்யக் கூடாது. இந்த நிலையை `தைராய்டு ஸ்ட்ராம்' என்றும் சொல்வோம். இந்த பாதிப்புள்ளவர்களுக்கு இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். தூக்கமின்மையும், அதிக வியர்வையும் இருக்கும்.
தைராய்டு சுரப்பின் அளவுகள் ஒரே மாதிரி இல்லாமல் ஏற்ற, இறக்கங்களுடன் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு அதிகமாகி, இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் தைராய்டு சுரப்பு நிலையாக இல்லாத யாரும் ரத்த தானம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களாக தைராய்டுக்கு மாத்திரைகள் எடுத்துக் கொண்ட நிலையிலும், அதன் பிறகு மருத்துவரை சந்தித்து TSH FT3. FT4 என்ற மூன்று டெஸ்ட்டுகளையும் செய்து அவை ரத்தத்தில் சரியான அளவில் இருந்தால் மட்டும் ரத்த தானம் செய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/DwE0txm
0 Comments