தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட சுப்பிரமணியபுரம் டு மீனாட்சிபுரம் வரை நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பிலிருந்து வரும் சாலைகளில் ஒரே நாள் இரவில் அறிவிப்புப் பலகையுடன் கூடிய 10 பெரிய இரும்புக்கம்பிகள், 11 பிரதிபலிப்பான் கொண்ட இரும்புக் கம்பிகள் ஆகியவை காணாமல் போயுள்ளன. இது குறித்து விளாத்திகுளம் நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வாளர், ஆத்தியப்பன் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீஸார் இரவு நேரத்தில் மீனாட்சிபுரம் அருகிலுள்ள ஊர்களில் ரகசிய ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூன்று பேர் சாலையோரத்தில் உள்ள புளியமரங்களின் அருகில் நடப்பட்டிருந்த பிரதிபலிப்பான் கொண்ட இரும்புக்கம்பிகளை பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தனர். 3 பேரையும் சுற்றி வளைத்த போலீஸார், அவர்களைக் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ஜேம்ஸ், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, நரிப்பையூரைச் சேர்ந்த கருப்பசாமி, ஆதி என்பது தெரியவந்தது.
போலீஸார் அவர்களிடம் விசாரித்தபோது, ``அதிக வாகனப் போக்குவரத்து இல்லாத சாலைகளை இரவு நேரங்கள்ல நோட்டமிட்டு பார்த்து வச்சுக்குவோம். ரெண்டு மூணு நாள் தொடர்ந்து கண்காணிப்போம். ராத்திரி 11 மணிக்கு மேல லோடு ஆட்டோவை இரும்புக்கம்பி பக்கத்துல நிறுத்தி வச்சுட்டு ரோட்டு ஓரங்கள்ல நிறுத்தப்பட்டிருந்த இரும்பு அறிவிப்புப்பலகைகள், இரும்புக்கம்பிகளை பெயர்த்தெடுத்து லோடு ஆட்டோவுக்குள்ள போட்டு கொண்டு வந்துடுவோம். கணிசமான எண்ணிக்கையில இரும்புக்கம்பி சேர்ந்ததும் பழைய இரும்புக்கடையில போட்டு காசு வாங்கிடுவோம்.
மழை பெய்யுற நேரமா இருந்தா ரோட்டுல ஆள் வராது. பயப்படாம தைரியமா கம்பியை பெயர்த்தெடுக்கலாம். மழை தண்ணியில பெயர்த்தெடுக்கவும் ஈஸியா இருக்கும்” எனச்சொல்லி போலீஸையே அதிரவைத்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.65,000 மதிப்புடைய அறிவிப்புப் பலகையுடன் கூடிய 10 பெரிய இரும்புக்கம்பிகள், 11 பிரதிபலிப்பான் கொண்ட இரும்புக்கம்பிகள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/9TYkeQf
0 Comments