கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள இரிஞாலக்குடா பகுதியில் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இரு தினங்களுக்கு முன் பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்துக்கு வியர்க்க விறுவிறுக்க சென்றுள்ளார். காவலர்களிடம் தன்னை தொழிலதிபர் என அறிமுகம் செய்துவிட்டு தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக கூறியுள்ளார். அந்த புகாரில், ``இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு இளம் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இன்ஸ்டாவில் சாட் செய்த அந்த இளம் பெண், தன்னுடைய கணவர் துபாயில் இருப்பதாகவும், வீட்டில் உடல்நலம் சரியில்லாத தாயுடன் வசித்து வருவதாகவும் கூறியதுடன், நீங்கள் வீட்டுக்கு வந்தால் நாம் இருவரும் தனிமையில் நெருக்கமாக, ஜாலியாக இருக்கலாம் என அழைத்தார். அதை நம்பி இளம் பெண் கொடுத்த முகவரியில் பாலக்காடு அருகே உள்ள யாக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு எனது சொகுசு காரில் சென்றேன்.
பெரிய அளவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டுக்குச் சென்றதும், இன்ஸ்டாகிராமில் என்னிடம் பழகிய இளம்பெண் மட்டும் இருந்தார். என்னை வரவேற்ற அந்த பெண் நேராக படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த சமயத்தில் திடீரென ஐந்துபேர் வீட்டுக்குள் புகுந்து என்னை மிரட்டி ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி வீடியோ மற்றும் போட்டோக்களையும் எடுத்தனர்.
எனது கழுத்தில் கிடந்த நான்கு பவுன் தங்க செயின், செல்போன், ஏ.டி.எம் கார்டு, கார், கையில் இருந்த பத்தாயிரம் ரூபாய் ஆகியவற்றையும் பறித்துவிட்டனர். என்னை நிர்வாணப்படுத்தி எடுத்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதல் பணம் கேட்டு மிரட்டினார்கள். கொடுங்கல்லூரில் உள்ள என்னுடைய பிளாட்டில் பணம் இருப்பதாக கூறியதும் என்னை காரில் ஏற்றி கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்றனர். வழியில் சிறுநீர் கழிக்கவேண்டும் எனக்கூறி காரில் இருந்து இறங்கி தப்பி ஓடி காவல் நிலையத்துக்கு வந்துள்ளேன். அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
துரிதமாக செயல்பட்ட போலீஸார் காரில் சென்ற அந்த கும்பலையும், தொழிலதிபர் கூறிய அந்த வீட்டில் இளம் பெண் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இளம் பெண் கண்ணூரை சேர்ந்த கோகுல் தீப்(29) என்பவரின் மனைவி தேவு(24) என தெரிய வந்துள்ளது. கோகுலும் அந்த கும்பலில் இருந்துள்ளார். மேலும் கோட்டயம் பகுதியை சேர்ந்த சரத், திருச்சூரை சேர்ந்த அஜித், வினய், ஜிஷ்ணு, இந்திரஜித், ரோஸித் ஆகிய 8 பேரை கைது செய்தனர். கணவன் மனைவியான கோகுல், தேவ் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் 'பீனிக்ஸ் கப்பிள்' என்ற பெயரில் ஆக்டிவாக செயல்பட்டு வந்துள்ளனர்.
கணவன் மனைவியான கோகுல், தேவ் ஆகியோர் சமூக வலைதளத்தில் தொழில் அதிபர்களுக்கு வலை விரித்து பணம் பறிப்பது வாடிக்கை எனவும், இதற்காக அவர்கள் தொழிலதிபர்களை அடையாளம்காண டீமாக சேர்ந்து செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீஸார் கூறுகையில், "இந்த கும்பலில் சரத் என்பவர் மூளையாக செயல்பட்டுள்ளார். சரத் மீது கொள்ளை மற்றும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2018-ம் ஆண்டு மழைவெள்ள பிரளயத்தின்போது சரத்தின் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்த சமயத்தில் அந்த தொழிலதிபர் உதவியிருக்கிறார். சந்தோஷத்துக்காக தொழிலதிபர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார் என்பதை புரிந்துகொண்ட சரத் அவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.
'பீனிக்ஸ் கப்பிள்' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இயங்கும் கோகுல் தீப் - தேவு தம்பதியிடம் விபரத்தை கூறியுள்ளார். ஆடம்பர வாழ்வுக்கு பணம் வேண்டும், அதற்காக எதுவும் செய்யலாம் என்ற கொள்கையுடைய தேவு, அதற்கு உடனே சம்மதித்துள்ளார். இதற்கு அவரின் கணவனும் உடந்தையாக இருந்துள்ளார். தொழிலதிபரிடம் இன்ஸ்டாகிராமில் சார்ட் செய்த தேவு அவரை பாலக்காட்டுக்கு அழைத்துள்ளார். பெண் விஷயம் என்பதால் பணத்தை இழக்கும் தொழிலதிபகள் போலீஸில் புகார் செய்யமாட்டார்கள் என இவர்கள் நினைத்துள்ளனர். தொழிலதிபர்களை வீழ்த்த பாலக்காடு மற்றும் கொடுங்கல்லூரில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளது இந்த கும்பல். இவர்களின் வலையில் வேறு தொழிலதிபர்கள் யாராவது விழுந்துள்ளனரா எனவும் விசாராணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/vanu3b9
0 Comments