``சசிகலா, வைத்திலிங்கம் சந்திப்பு திட்டமிட்ட ஒன்று” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்

மின் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் அ.தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டார். கடந்த முறை விலைவாசி உயர்வை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்.காமராஜை சோழமண்டல தளபதி என குறிப்பிட்டு போஸ்டர் மற்றும் பிளக்ஸ் வைத்து நிர்வாகிகள் வரவேற்ப்பு கொடுத்தனர்.

அ.தி.மு.க சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.காமராஜ்

இந்த முறை சோழமண்டல தளபதி என்பதை தவிர்த்து விட்டனர். மற்ற ஊர்களில் ஆர்ப்பாட்டம் காலையிலேயே நடைப்பெற்ற நிலையில் ஆர்.காமராஜ் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாலை ஏற்பாடு செய்து நடத்தினர். திரட்டப்பட்டிருந்த கூட்டத்தை பார்த்தபடியே உற்சாகமாக மேடை ஏறினார் ஆர்.காமராஜ். பின்னர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்

இதையடுத்து ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம், ``மின் கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அப்படி குறைக்காவிட்டால் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அதில் எடுக்கும் முடிவின்படி அதிமுக-வின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.

மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததால் தான் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டி இருந்தது என திமுக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதும் மத்திய அரசிடம் இருந்து அழுத்தம் இருந்தது. ஆனால் நாங்கள் ஒருபோதும் மின் கட்டணத்தை உயர்த்த வில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக உள்ளது. சசிகலா அ.தி.மு.க அலுவலகம் செல்வேன் என்பது ஆசைக்கு சொல்லிக்க வேண்டியது தான் நடக்கப்போவதில்லை.

ஆர்.காமராஜ்

சசிகலா, வைத்திலிங்கம் சந்தித்து கொண்டது தற்செயலாக நடந்தது என கூறுகிறார்கள். ஆனால் அந்த சந்திப்பு என்பது திட்டமிட்ட செயலாகும். அ.தி.மு.கவால் பலனடைந்தவர்கள் அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டுமே தவிர அழிக்க நினைக்கக் கூடாது. திமுகவுக்கு துணை போகக்கூடாது. அ.தி.மு.கவு.க்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்” என்றார்.

கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் மருத்துவ கல்லூரி பகுதி கழக செயலாளரான சரவணன், காந்தி உள்ளிட்டோரை தனது காரில் ஏற்றிக் கொண்டார் ஆர்.காமராஜ். வைத்திலிங்கம் ஏரியாவுக்கு ஆர்.காமராஜை அழைத்து வந்து மாஸ் காட்டியுள்ளனராம். அதற்காக சரவணன் உள்ளிட்டோரை காரில் அழைத்து சென்று தட்டி கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார் ஆர்.காமராஜ் என கட்சி நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/QgjIreM

Post a Comment

0 Comments