”கடைசி வரிசை மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்!”– ஆசிரியர் தினவிழாவில் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி அரசு, பள்ளி கல்வித்துறை சார்பில் கருவடிகுப்பம் பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “என்னை போன்றவர்கள் இத்தகைய மேடைகளில் நின்று கொண்டிருப்பதற்கு ஆசிரியர்கள் பெருமக்கள் மட்டுமே காரணம். ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்ற விதத்தில் ஆசிரியர் சமுதாயத்திற்கு மரியாதையும், நன்றியும் தெரியப்படுத்த நான் தவறுவதில்லை.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது என்றால் அவர் எந்த அளவிற்கு மதிக்கப்பட்டார் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர் ஆசிரியராக இருந்தார் என்ற காரணத்திற்காக இங்கிலாந்து நாட்டின் ராணி பயணிக்கும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். பெற்றோர்கள் சிலர் ஆசிரியர்களை குறை கூறுகிறார்கள். இரண்டு வருட கொரோனா காலத்திற்குப் பிறகு அவர்களின் கருத்துகள் மாறி, ஆசிரியர்கள் எல்லாம் வணக்கத்திற்குரியவர்கள் என்று பேசினார்கள்.

ஆசிரியர் தினவிழாவில் முதல்வர் ரங்கசாமியுடன், தமிழிசை

இன்றைய மாணவர்களை கையாள்வது என்பது மிகவும் சிரமமான காரியம். ஏனென்றால் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். எல்லாம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மருத்துவர் மாநாட்டில் பேசும்போதும், அரசியல்வாதிகள் மத்தியில் பேசும்போதும் எனக்கு பயம் இருக்காது. ஆனால் மாணவர்கள் மத்தியில் பேசும்போது சற்றே பயம் வரும். ஏனென்றால் அவர்கள் நம்மை விட அறிவாளிகளாக, புத்திசாலிகளாக இருக்கிறார்கள். குழந்தைகளை கையாள்வது என்பது மிகப்பெரிய கலை. அதற்கு மிகவும் பொறுமை வேண்டும். குழந்தைகளின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு பாடம் சொல்லித் தர வேண்டும்.

அவர்களுடைய மனதை மகிழ்ச்சியாக வைப்பதுதான் ஆசிரியர்களின் முதல் கடமை. குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாக பள்ளிக்கு வரவேண்டும். பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள் படிக்க முடியாமல் கடைசி முடிவை எடுக்கும் சூழ்நிலை ஏன் உருவாகிறது? அத்தகைய சூழ்நிலை வராமல் பாதுகாக்க வேண்டியது ஆசிரியர்கள் பெருமக்கள் மட்டுமல்லாமல் நம் அனைவரின் கடமை. பெண் குழந்தைகளிடம் வளரிளம் பருவத்தில் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.

அரசுப்பள்ளி ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். ஏனென்றால் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதை என்னுடைய ஆய்வின்போது கண்கூடாக பார்த்தேன். 75 பள்ளிகளை பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு 30 பள்ளிகளை பார்த்திருக்கிறேன். ஆசிரிய பெருமக்கள் வணக்கத்திற்குரியவர்கள் என்பதை கண்டு கொண்டேன். சிலம்பம், பொம்மலாட்டம், யோகா போன்றவற்றை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஆசிரிய பெருமக்கள் பாராட்டுக்குரியவர்கள் மட்டுமல்ல. பாதுகாக்கப்பட வேண்டியவர்களும் கூட.

அவர்களின் மனநிலை நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் மாணவர்களை பாதுகாக்க வேண்டும். வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பை கொடுத்துப் பாருங்கள். தானாகவே முதல் வரிசைக்கு தன்னை அவர் மாற்றிக் கொள்வார்கள். அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை விட அவர்களுடைய மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். இணையத்தளங்களும், புதிய தொழில்நுட்பங்களும் மாணவர்களை ஈர்க்கிறது. அந்த தொந்தரவுகளில் இருந்து அவர்கள் வெளிவர வேண்டும். அதையெல்லாம் கவனத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்க வேண்டும். மாணவர்களை கண்காணித்து வளர்க்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு விஷம் கொடுக்கும் அளவிற்கு போட்டி வளர்ந்திருக்கிறது என்றால் இதைவிட வேதனையான விஷயம் உலகத்தில் இருக்கவே முடியாது. படிப்பில் மேலே வந்தால் மட்டும்தான் சிந்திக்க முடியும் என்பதையெல்லாம் தாண்டி, இலகுவான மகிழ்ச்சியான சூழலை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் அவர்கள் முன்னுக்கு வர வேண்டிய அதே நேரத்தில், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஆசிரிய பெருமக்கள் குழந்தைகளிடம் தாய்மை உணர்வோடு பழக வேண்டும்.

ஆசிரியர் பெருமக்களின் பணி இன்று முற்றிலும் மாறிவிட்டது. தொடக்கத்தில் பாடம் சொல்லித் தந்தால் மட்டும் போதும். ஆனால் இன்று அவர்களை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும். குழந்தைகள் பேசத் தொடங்கினால் அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கலாம். ஒரு தாயாக, மருத்துவராக, சமுதாயவாதியாக ஆசிரியர்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பள்ளிக்கூடம் மகிழ்ச்சியானது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளிகள், மாணவர்கள் உயர்வதற்குதானே தவிர உயிரை மாய்த்துக்கொள்வதற்கு அல்ல என்பதை சரியாக எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/nXFSuqW

Post a Comment

0 Comments