``மருந்துகளும் இல்லை... மருத்துவர்களும் இல்லை..!” - அரசு மருத்துவமனையை சாடும் புதுச்சேரி திமுக

புதுச்சேரியின் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா, ``புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நகரம் மற்றும் கிராமங்களிலிருந்து தினந்தோறும் 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். 350-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதுமான மருந்து, மாத்திரைகள் மற்றும் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  குறிப்பாக புதுச்சேரி சுகாதாரத்துறையில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 மருத்துவர்கள், 42 மருந்தாளுநர்கள், 300 துணை மருத்துவ பணியாளர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் இருந்தால் நோயாளிகளுக்கு எப்படி உரிய நேரத்தில் தரமான சிகிச்சை அளிக்க முடியும் ?

மருந்துகள் தட்டுப்பாடு

அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற நேரிடுகிறது. அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது அரசுக்கு தெரியாதா?

அதேசமயத்தில் அரசு பொதுமருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் பழுதாகியுள்ளதால், ஏழை எளிய நோயாளிகள் ரூ.7,000/- வரை கொடுத்து வெளியே ஸ்கேன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சி.டி ஸ்கேன் இயந்திரமும் ஒன்று மட்டுமே இருக்கிறது. அதுவும் ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக ஸ்கேன் செய்யும்போது பழுதாகி நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல ஆஞ்சியோ செய்யும் வசதியும் நீண்ட நாட்களாக இல்லை. மேலும் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை கொள்முதல்  செய்வதற்கான, மத்திய கொள்முதல் கமிட்டி (சி.பி.சி)  ஆண்டுதோறும் மார்ச் மாதத்திற்குள் மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகளை முடித்து, மருந்துகளை கொள்முதல் செய்யும்.

ஆனால் நடப்பாண்டிற்கான மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான பணிகளை மத்திய கொள்முதல் கமிட்டி 7 மாதங்கள் ஆகியும் இறுதி செய்யாததால், பல்வேறு நிறுவனங்கள் மருந்துகள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை வெளி மருந்தகங்களில் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள பல 108 ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக காலாப்பட்டு, தவளக்குப்பம், காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்கள் எப்ஃ.சி எடுக்காமல் நீண்ட நாட்களாக பயனற்று நிற்க வைக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற நோயாளிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். அதேபோன்று பயன்பாட்டில் உள்ள  பெரும்பாலான ஆம்புலன்ஸ்களிலும் உதவியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. இதேபோன்று புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரிகள் குழுவின் தர ஆய்வின்படி  கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக அங்கு அவசர சிகிச்சை பிரிவு சரிவர செயல்படவில்லை, அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் தராததால், அவர்கள் பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது எந்த மருத்துவமனையிலும் நடைபெறாத ஒன்று. இந்த அளவுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தரம் மோசமாகியுள்ளது. இதுபோன்ற நிலையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்?  அங்கும் போதிய மருந்து, மாத்திரைகள் இல்லை. பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. முக்கியமான துறைக்கு பேராசிரியர்கள் இல்லை. எனவே இனியும் பொதுமக்களின் உயிர் விஷயத்தில் விளையாடாமல், புதுச்சேரி அரசும், துறை அமைச்சரான முதல்வர் ரங்கசாமியும் அலட்சியம் காட்டாமல் போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/XG7SI9i

Post a Comment

0 Comments