நீலகிரி: சுருக்கில் சிக்கித் தவித்த சிறுத்தையை மீட்டு சிகிச்சை... ஒருவர் கைது! -நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள அத்திசால் தனியார் தோட்டத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருக்கு போராடி வருவதாக நேற்று முன்தினம் மாலை வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்த வனத்துறையினர், சுருக்கு கம்பியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த சிறுத்தையை உயிருடன் மீட்கும் முயற்சியில் இறங்கினர். அருகில் யாரையும் நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுத்தையை மீட்க முதுமலையில் இருந்து வனக் கால்நடை மருத்துவரை வரவழைத்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி மீட்டு கூண்டுக்குள் அடைத்தனர். பின்னர் முதுமலையில் உள்ள வனக் கால்நடை மருத்துவமனைக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட சிறுத்தை

இது குறித்து தகவல் தெரிவித்த வனத்துறையினர், ``சுமார் 5 வயது மதிக்கத்தக்க இந்த பெண் சிறுத்தையை சுருக்கு கம்பியில் இருந்து பத்திரமாக மீட்டோம். இதன் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடமாட முடியாத நிலையில் இருக்கிறது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவரின் மருமகன் அனீஸ்ராஜன் என்பவரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சிறுத்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் மீண்டும் வனத்துக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் " என்றனர்.



from Latest News https://ift.tt/RyatWv6

Post a Comment

0 Comments