ஓபிஎஸ் மகன் தோட்டத்தில் சிறுத்தை பலி - பொய் வழக்கு போட்டதாக தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

​தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை வனப்பகுதியை ஒட்டி அ​.​தி​.​மு​.​க ​தேனி ​எம்.பி ரவீந்திரநாத்துக்குச் சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள சோலார் வேலியில் கடந்த செப்டம்பர் 28​-ம்​ தேனி 2​ ​வயதுடைய ஆண் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்டத்தில் தற்காலிகமாக கிடை அமைத்து ஆடு மேய்த்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை செப்டம்பர் 29​-ம் தேதி வனத்துறையினர் கைதுசெய்து சிறையில் அடை​​த்தனர்.‌ 

போராட்டம்

இதையடுத்து தோட்டத்து உரிமையாள​ரைக் காப்பாற்றுவதற்காக ஆடு மேய்​ப்பவர்மீது வனத்துறையினர் பொய்யான வழக்கு பதிவுசெய்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றச்சாட்​டினர். இத​னைத் தொடர்ந்து ரவீந்திரநாத் எம்‌.பி-யின் தோட்ட மேலாளர்கள் பெரியகுள​த்தைச் சேர்ந்த​ தங்கவேல் ​(​42), போடி நாகலாபுரத்தைச் சேர்ந்த ராஜவேல் (28) ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைதுசெய்தனர்.

​இந்த நிலையில், ​​சிறுத்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், கூட்டு சதி செய்து சிறுத்தையைக் கொலைசெய்துவிட்டு அப்பாவி ஆடு மேய்க்கும் விவசாயி அலெக்ஸ் பாண்டியன்மீது பொய்யான வழக்கு பதிவுசெய்து மனித உரிமை மீறலோடு நடந்து கொண்ட வனத்துறையினர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் தேனி​ கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கோயமுத்தூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிர​​த்திற்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மதுரை - தேனி சாலையில் ஊர்வலமாக ​கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். 

கால்நடை வளர்ப்போர் சங்கம்

அவர்கள் ​சிறுத்தை உயிரிழப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியனை விடுதலை செய்யக்கோரியும், உன்மையான குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பியவாறு ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ​கலெக்டர் மற்றும் ​எஸ்.பி அலுவலகத்தில் வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க ​​மாநில பொதுச்செயலாளர் சரவணன், ``ரவீந்திரநாத் எம்.பி-யின் தோட்ட மேலாளர் தங்கவேல் என்பவர், அலெக்ஸ் பாண்டியனை மிரட்டி, வலுக்கட்டாயப்படுத்தி சிறுத்தையைக் கொலைசெய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி வீடியோ எடுத்து அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.‌ மேலும் வனத்துறையினரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அலெக்ஸ் பாண்டியனை அடித்து துன்புறுத்தி மனித உரிமை மீறலோடு நடத்தியுள்ளனர். சிறுத்தையின் மரணத்தில் தோட்ட உரிமையாளர்கள், மேலாளர்கள் ஆகியோர் தங்களை தற்காத்துக் கொள்ளவே அப்பாவி ஆடு மேய்க்கும் விவசாயிமீது வழக்கு பதிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

உயிரிழந்த சிறுத்தை

எனவே அப்பாவி ஆடு மேய்க்கும் விவசாயியை விடுதலை செய்யக்கோரியும், கூட்டு சதி செய்து சிறுத்தையை கொலைசெய்த தோட்டத்தின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீது புலன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச்செயலர், காவல்துறை இயக்குநர், வனத்துறையினர் உயரதிகாரிகள் உள்ளிட்டோர்களுக்கு புகார் மனு அளிக்கவிருக்கிறோம்.​ ​தேவைப்பட்டால் சிறுத்தையின் மரண வழக்கை சிபிசிஐடி அல்லது சி.பி.ஐ-க்கு மாற்றி விசாரணை நடத்திட வேண்டும். உரிய நீதி கிடைக்காவிட்டால் தமிழ்நாடு தலைமைச் செயலகம் மட்டுமல்லாது இந்திய நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என்றார். 



from Latest News https://ift.tt/FufXO92

Post a Comment

0 Comments