"உங்கள் தலைவரைப் போல் குறிப்பு வைத்துக்கொண்டு பேசுபவர் அல்ல எடப்பாடியார்!" - ஆர்.பி.உதயகுமார் தாக்கு

"முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் மூர்த்தி நாகரிகமில்லாமல் தரம் தாழ்த்திப் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது மதுரை அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

மூர்த்தி இல்லத் திருமணம்

சமீபத்தில் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பி.மூர்த்தி மகனின் ஆடம்பர திருமணம் குறித்தும் விமர்சித்தார்.

இதற்கு எதிர்வினையாக அரும்பனூர் அரசு விழாவில் பேசிய பி.மூர்த்தி, ``என் மகன் திருமணத்தில் அனைவருக்கும் சாப்பாடு போட்டதை அரசியலாக்குகிறார்கள். ஒரு தகர செட் போட்டு துணியை கட்டி சாதி, மதம் பார்க்காமல் ஏழை பணக்காரன் வித்தியாசமில்லாமல் சாப்பாடு போடப்பட்டது. ஒரு இலைக்கு 300 ரூபா என்றாலும் 50,000 பேருக்கு ஒன்றைக்கோடி ஆகியிருக்குமா? எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தார்?" எனப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், "கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் கலந்துகொண்ட மதுரை, சிவகாசி கூட்டங்களில் திரண்ட கூட்டத்தைப் பார்த்த ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

ஆர்.பி. உதயகுமார்

மதுரைக் கூட்டத்தில் தி.மு.க அரசின் நிர்வாக குளறுபடிகளையும், அமைச்சர் பி.மூர்த்தி நடத்திய ஆடம்பர திருமணத்தைப் பற்றியும் பேசினார். ஆனால் அதற்கு அமைச்சர் மூர்த்தி அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒருமையில் தரம் தாழ்த்திப் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு, பேசுவதற்கு தார்மீக கடமை உண்டு. நீங்கள் நடத்திய ஆடம்பர திருமணத்தைப் பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். உலை வாயை மூடலாம், ஆனால் ஊர் வாயை மூட முடியாது. மூன்று கோடி செலவு என்று நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள்.

மக்களுக்குக்கான திட்டங்கள் என்றால் நிதிநிலை பற்றாக்குறை... அம்மா உணவகத்திற்கு நிதிப் பற்றாக்குறை, மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் திட்டம் என அனைத்துக்கும் நிதிப் பற்றாகுறை என்று கூறப்படுகிறது. ஆனால், ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. மதுரையில் இதுவரை எந்த அமைச்சர் குடும்பத்திலும் இதுபோன்ற ஆடம்பர திருமணம் நடக்கவில்லை. இதைப்பற்றி எடப்பாடியார் பேசுவதில் எந்த தவறும் இல்லை. அமைச்சர் மூர்த்தி பழையதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

மதுரைக் கூட்டத்தில் எடப்பாடி

எங்கள் ஆட்சியில் கனிமவளத்துறை, வணிகவரித்துறையில் நடைபெற்ற புள்ளி விவரங்கள் குறித்து உங்களுடன் விவாதிக்க நான் தயார். கடந்த ஒன்றறை ஆண்டுக்காலம் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை விவாதிக்கத் தயாரா? கடந்த நான்கு ஆண்டுக்காலத்தில் எடப்பாடியார் அனைவரையும் அரவணைத்துச் சென்றார். எடப்பாடியாரிடம் உதவி கேட்காதவர்கள் யாரும் கிடையாது, 

அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி எடப்பாடியார் கூறியது தவறு என்றால் நீங்கள் அவமதிப்பு வழக்கு தொடரலாமே தயக்கம் ஏன்? 

ஆடம்பரத் திருமணம் என்பது ஊரே அறிந்த விஷயம், எதிர்க்கட்சித் தலைவருக்கு யாரும் எழுதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் தலைவரைப்போல் குறிப்பு எழுதி பேசுபவர் அல்ல குறிப்பு இல்லாமல் 5 மணி நேரம்கூட எடப்பாடியார் பேசுவார்.

எங்கள் ஆட்சியில் எடப்பாடியாரை அழைத்து வந்து ஏழை எளிய 120 ஜோடிகளை தேர்வு செய்து திருமணத்தை நடத்தினோம், ஆனால், நீங்கள் முதலமைச்சரை அழைத்து வந்து உங்கள் வீட்டு திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியிருக்கிறீர்கள்.

ஒரு அமைச்சராக இருந்து கொண்டு மக்கள் முகம் சுளிக்கும் வகையில் திருமணம் நடந்தைப் பற்றி நியாயம் கேட்க எதிர்க்கட்சித் தலைவருக்கு தார்மீக உரிமை உண்டு. இதுபோன்ற, அநாகரிகமான முறையில் பேசுவதை அமைச்சர் மூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/DPQo5AT

Post a Comment

0 Comments