2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் போன்றோர் தனித்தனியாக முயன்று வருகின்றனர். நிதீஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா இப்போது எதிர்க்கட்சிகள் பக்கம் திரும்பி இருக்கிறது. இதனால் சிவசேனாவை பாஜக இரண்டாக உடைத்துவிட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே தனது கட்சி நிர்வாகிகள் பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய் ஆகியோருடன் நேற்று மாலை பாட்னா சென்றார். ஏற்கனவே சமீப காலமாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வியுடன் ஆதித்ய தாக்கரே தொடர்பில் இருப்பதால் விமான நிலையத்தில் இருந்து நேராக தேஜஸ்வியின் இல்லத்திற்கு ஆதித்ய தாக்கரே சென்றார்.
அவரை வரவேற்ற தேஜஸ்வி அவருக்கு தனது தந்தை லாலு பிரசாத் யாதவ் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வழங்கினார். பின்னர் இரு இளம் தலைவர்களும் நடப்பு அரசியல் நிலவரம் குறித்து பேசிவிட்டு, இருவரும் முதல்வர் நிதீஷ் குமாரை சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த தேஜஸ்வி, ``எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து பேசினோம். நான் விரைவில் மும்பை சென்று உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேச இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
பாஜகவால் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களும் மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். ஒரே நேரத்தில் இரண்டு கூட்டணி கட்சிகள் பாஜகவில் இருந்து விலகி இருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ஒடிசா முதல்வர் பட்நாயக், அதிமுக உள்ளிட சில மாநில கட்சிகள் தேவைப்படும் போது பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றன. இந்த கட்சிகள் எதிர்க்கட்சிகளின் அணியில் சேர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/wZNOrkK
0 Comments