கத்தார் கால்பந்து உலகக்கோப்பை:
கத்தாரில் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் (FIFA World Cup Qatar 2022), நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை நடத்துவதற்கான உரிமையை கத்தார் நாடு கடந்த 2010-ம் ஆண்டு பெற்றது. நடைபெறும் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்த போட்டியைக் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும், கோடிக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வருகை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
உலகக்கோப்பைக்கு அனுமதி பெற்ற பிறகு கத்தாரில் புதிய கால்பந்து மைதானம், விமான நிலையங்கள், அதிநவீன விடுதிகள், மெட்ரோ போக்குவரத்து, சாலை என்று இந்த தொடருக்கு மட்டுமே அந்த நாடு 220 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவு செய்துள்ளது. இது இந்திய மதிப்புக்கு 17 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த காலங்களில் மற்ற நாடுகள் உலகக்கோப்பை தொடரை நடத்தச் செலவு செய்ததை விட இந்த தொகை மிகவும் அதிகமாகவும். உதாரணமாக 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற தொடரின் போது 11.6 பில்லியன் டாலர் செலவானதாகத் தரவுகள் கூறுகின்றன.
சர்ச்சைகள்:
சுவிட்சர்லாந்துக்குப் பிறகு கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடத்தும் அடுத்த சிறிய நாடு கத்தார்தான். உலகக்கோப்பையை நடத்த உரிமை பெற்ற சமயத்திலேயே அதிகாரிகளுக்கு 3 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்து ஏலத்தில் அனுமதி பெற்றதாகச் சர்ச்சை கிளம்பியது. கத்தார் உலகக்கோப்பை தொடர் நடத்த அனுமதி பெற்றது முதல் போட்டி தொடங்கியது வரை பல்வேறு சர்ச்சைகள் சுழன்றுகொண்டே இருக்கிறது. குறிப்பாகக் கால்பந்து மைதானம் அமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததாகச் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த உலகக்கோப்பைக்காக ஒரு புதிய நகரத்தையே அந்த நாடு உருவாக்கவேண்டிய தேவை இருந்தது. இந்த பணியில், பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டார்வர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். குறிப்பாக, இந்தியா, வங்காளதேசம், நேபாளம், ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். தி கார்டியன் இதழின் அறிக்கையின்படி, 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, 6,500-க்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உலகக்கோப்பை தொடர்பான பணிகளில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அதிக வெப்பம்...
கத்தாரில் 40-50 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும், அதன் காரணமாகவே குளிர் காலத்தில் இந்த தொடர் நடைபெறுகிறது. அதிகமான வெப்ப நிலையில் தொடர்ந்து 12 மணிநேரம் வேலை பார்ப்பது. அங்குள்ள மணல் தூசி போன்ற பல்வேறு காரணங்களினால் நல்ல ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், பலரும் மாரடைப்பு வந்து சுருண்டு விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. தி கார்டியன் இதழின் அறிக்கையின் படி மொத்தம் 6,700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் கிட்டத்தட்ட, இந்தியாவைச் சேர்ந்த 2,700 பேர், நேபாளத்தைச் சேர்ந்த 1,600 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 824 பேர், இலங்கையைச் சேர்ந்த 557 பேர் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும், உலகக்கோப்பை மைதானம் கட்டும் இடத்தில் மட்டுமே பல மரணங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நிகழ்ந்த பல மரணங்கள் இயற்கையான மரணம் என்றே பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில், அப்படி உயிரிழந்த பல தொழிலாளர்களுக்கும் அந்த நிறுவனத்திடமிருந்து எந்த இழப்பீடும் கிடைக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் சார்ப்பில், வேலை தொடர்பாக 3 இறப்புகளும், வேலைக்குச் சம்பந்தம் இல்லாத 37 இறப்புகளும் நடந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 6,500-க்கும் மேற்பட்ட மரணங்கள் நடந்திருப்பதாக தி கார்டியனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கத்தார் சார்பில் இதுவரை, இந்த சம்பவம் குறித்து எந்த தெளிவான விளக்கமும் வழங்கப்படவில்லை. நிகழ்ந்த மரணங்கள் அனைத்துமே இயற்கையான மரணம் என்று மட்டுமே கூறப்பட்டுவருகிறது.
from Latest News https://ift.tt/7mwOfHJ
0 Comments