கும்பகோணத்தில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் விளம்பரம் கிடைக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தருவார்கள் என்பதற்காக இந்து முன்னணி நிர்வாகியே பாட்டிலை உடைத்து விட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடியது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கும்பகோணம், மேலக்காவேரி, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (38) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி (37) மகன் இனியன் (11). சக்கரபாணி இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சக்கரபாணி மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அவருடைய வீட்டு வாசலில் வீசப்பட்ட கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறி கிடந்தது.
இதையடுத்து தன் வீட்டின் முன்பு யாரோ பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்று விட்டதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார் சக்கரபாணி. அத்துடன் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போலீஸார் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சக்கரபாணி வீட்டின் முன்பு திரண்டனர். இச்சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி., ரவளிப்பிரியா, ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன், தடயவியல் துறை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோர் சக்கரபாணி வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். மோப்ப நாய் டாபி அழைத்து செல்லப்பட்டு துப்பறியும் பணியில் ஈடுபட வைத்தனர். டாபி கொஞ்ச துாரம் மட்டுமே ஓடி நின்று விட்டது.
வீட்டு வாசலில் உடைந்து கிடந்த பாட்டிலை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து அதில் பதிந்திருந்த கைரேகையை சோதனை நடத்தினர்.இந்த நிலையில் மண்ணெண்ணை வாசனையுடன் ஒரே இடத்தில் பாட்டில் உடைந்து கிடந்ததால் போலீஸாருக்கு சக்கரபாணி மீதே சந்தேகம் ஏற்ப்பட்டது. இதையடுத்து அவரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதில், தனக்கு விளம்பரம் கிடைக்கும் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு தருவார்கள் என்பதால் தானே பாட்டிலில் மண்ணெண்ணை ஊற்றி உடைத்து விட்டு பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக நாடகமாடினேன் என போலீஸிடம் ஒப்புக் கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், ``அதிகாலை மர்ம நபர்கள் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதாக சக்கரபாணி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்ததுமே வெளி நபர்கள் யாரும் இதை செய்திருக்க வாய்ப்பில்லை என தோன்றியது. வீசப்பட்ட பாட்டிலில் பெட்ரோல் நிரப்பாமல் மண்ணெண்ணை நிரப்பப்பட்டிருந்தது. அத்துடன் அந்த கண்ணாடி பாட்டிலை துாரத்திலிருந்து வீசினால் அவை கீழே விழுந்து உடையும் போது எங்கும் சிதறி கிடக்கும்.
ஆனால், வாசலில் உடைந்து கிடந்த பாட்டில் சிதறாமல், ஒரே இடத்தில் உடைந்து கிடந்தது. மேலும் இந்து அமைப்புகளில் உள்ளவர்கள் செயல்பாட்டோடு சக்கரபாணியை ஒப்பிட்டு பார்த்தால் அவர் குறிப்பிடும்படியாக எதுவும் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் யாரிடமும் முன் விரோதமும் இல்லை என்பது தெரியவந்தது. இதையெல்லாம் வைத்து சக்கரபாணியிடம் விசாரணை மேற்கொண்டோம். அத்துடன் சக்கரபாணி மனைவியிடமும் தனியாக விசாரித்தோம். இதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
முதலில் தான் இதனை செய்யவில்லை என மறுத்தவர் பின்பு ஒப்புக்கொண்டார். பாட்டிலில் எரிந்த திரியின் துணி எங்களது வீட்டிலிருந்த போர்வையில் கிழித்தது என்றும் விளம்பரத்துக்காக தானே இதனை செய்ததாக ஒப்புக்கொண்டார். பெட்ரோல் குண்டு வீசியதாக சொன்னால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்பதாலும், இந்த நாடகத்தை நடத்தியதாக சக்கரபாணி கூறியது எங்களையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இது தொடர்பாக மேலகாவிரி வி.ஏ.ஓ. திருஞான சம்மந்தம் அளித்த புகாரின் பேரில், வெடிபொருளால் கட்டடத்தை சேதப்படுத்த முயற்சி செய்ததாக சக்கரபாணி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறோம்” என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3NlJMb7
0 Comments