புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சிறுதெய்வ வழிபாட்டுக் கோயில்களில் வெளியே தொங்கவிடப்பட்டுள்ள மணிகள் உள்ளிட்ட சில வெண்கல பொருள்களை திருடிக் கொண்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்பிச் செல்வதாக அந்தப் பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, கடந்த 14-ம் தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், அந்த ஆட்டோவை தங்களது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றிருக்கின்றனர். அப்போது, மச்சுவாடி என்ற பகுதி அருகே ஆட்டோ சென்றபோது, ஆட்டோவை மறித்து அதில் பயணித்தவர்களை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.
இதில், ஆட்டோவில் பயணித்த அனைவரும் காயமடைந்திருக்கின்றனர். ஆட்டோவில் பயணித்தவர்கள் கடலூர் மாவட்டம் , விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த சத்திய நாரயணசாமி, அவரின் மனைவி லில்லி புஷ்பா, மகன்கள் விக்னேஸ்வரசாமி, சுபமெய்யசாமி, மகள்கள் கற்பகாம்பியா, ஆதிலெட்சுமி என்பது தெரியவந்ததது. காயமடைந்தவர்களை மீட்ட போலீஸார், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 10வயது சிறுமி கற்பகாம்பிகா கடந்த 16-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, லில்லிபுஷ்பா அளித்த புகாரின் பேரில், இதனை கொலை வழக்காக பதிவு செய்த கணேஷ்நகர் போலீஸார் விசாரணையை தொடங்கினர். வீடியோ வெளியிட்டவர்களை டிராக் செய்து விசாரணை நடத்தியதில், புதுக்கோட்டை அருகே அண்டக்குளத்தைச் சேர்ந்த செல்வம், சந்திரசேகர், வீரையா, முருகேசன், வைத்தூரைச் சேர்ந்த பாஸ்கர், பாபு உள்ளிட்ட 6 பேரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, 6 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுதொடர்பாக, விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, 6 பேரை போலீஸார் கூட்டிச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்டக்குளம் பகுதி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர், அண்டக்குளம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"சிறுமி உயிரிழந்ததற்கு விரட்டிச் சென்றவர்கள் காரணமில்லை. அவர்கள் சிறுமியை தாக்கவில்லை எனவே அவர்களை விடுவிக்க வேண்டும்"என்றனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைத்தனர்.
இதற்கிடையே, கிள்ளனூர் பகுதியில் கோயில் பொருட்கள் திருடு போனதாக கோயில் பூசாரி குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய உடையாளிப்பட்டிப் போலீஸார், கோயிலில் பொருட்களைத் திருடியதாக, சத்தியநாரயணசாமி, தாய் லில்லி புஷ்பா, மகன் விக்னேஸ்வர சாமி ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/g0cre9w
0 Comments