சைதை சாதிக் விவகாரம்: ``மேடையிலேயே அவரை கண்டித்தேன்” - சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பகுதி சபா கூட்டம், வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கவிழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளுநர்கள் தங்கள் எல்லையை அறிந்து அவற்றிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தில் நன்மைக்காக பாடுபட வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்கிறார்களா என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஆளுநர்களை யார் செயல்படுத்துகிறார்கள் என்பது பொதுமக்களுக்கு தெரியும்" என்றார்.

பகுதி சபா கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ்

அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் திமுக-வின் சைதை சாதிக் பா.ஜ.க-வில் இருக்கும் பெண்கள் குறித்து பேசியது பற்றியும், நடிகை குஷ்பு அந்த விவகாரத்தை கையில் எடுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது குறித்தும், பா.ஜ.க போராட்டம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் கூறுகையில், "சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் நான் அந்த மேடைக்குச் சென்றேன். அவர் பேசிவிட்டு வந்து அமர்ந்ததும் இதுபோன்று பேசுவது சரியல்ல என மேடையில் வைத்தே அவரை கண்டித்தேன். நானும் பல மேடைகளில் பேசியிருக்கிறேன் ஆனால் தரம்தாழ்ந்து யாரையும் விமர்சித்து பேசியதில்லை.

பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ கழகத்திற்கோ உடன்பாடு இல்லை, அது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும், தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனை முடிவதற்குள் பா.ஜ.க அரசால் விடுதலை ஆகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பா.ஜ.க கட்சியினருக்கு பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை. தங்களை விளம்பரப்படுத்துவதற்காக அரசியல் கோமாளியாக அண்ணாமலை செயல்படுவது அட்டூழியம் போல காட்சியளிக்கிறது" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Dg3htJb

Post a Comment

0 Comments