Doctor Vikatan: கடலை, கிழங்கு உணவுகளால் வாயுத்தொல்லை வருவதைத் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: கிழங்கு மற்றும் சன்னா போன்ற உணவுகளை உட்கொண்டதும் வாயுத் தொந்தரவு வருவது ஏன்? வாயுத் தொந்தரவுக்கும் உணவுகளுக்கும் தொடர்புண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

சன்னா எனப்படும் கொண்டைக்கடலை, ராஜ்மா, கிழங்கு வகைகள் போன்றவற்றைச் சாப்பிடும்போது வாயுத்தொல்லை வருவதாக பலர் சொல்வதுண்டு. இவற்றைச் சமைக்கும் முறை என்பது முக்கியம். பச்சைப்பயறு, ராஜ்மா, சோயா, சன்னா என எந்தக் கடலை வகையானாலும் 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடித்துவிட்டு மீண்டும் தண்ணீர் ஊற்றி வேகவைத்துதான் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் வாயுத்தொல்லை ஏற்படுவது தடுக்கப்படும்.

அடுத்ததாக சமையலுக்கு நாம் பயன்படுத்துகிற மசாலா பொருள்களும் கவனிக்கப்பட வேண்டும். காலிஃபிளவர், முட்டைக்கோஸ், சேனைக்கிழங்கு, புரொக்கோலி, சேப்பங்கிழங்கு போன்றவற்றைச் சமைக்கும்போது நிறைய பூண்டு சேர்த்துச் சமைத்தால் வாயுத் தொந்தரவு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சிலர் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் என்பதால் தினமும் கொண்டைக்கடலை, ராஜ்மா என ஏதோ ஒன்றை சாப்பிடுவார்கள். அதுவும் தவறு. வாரம் ஒருமுறையோ, பதினைந்து நாள்களுக்கொரு முறையோ சாப்பிட்டால் போதுமானது.

அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மேற்குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அளவு குறைவாகச் சாப்பிடலாம். ஒரே ஒரு கரண்டி அல்லது அரை கப் அளவோடு நிறுத்திக்கொள்ளலாம். வாயுத்தொல்லை வராமலிருக்க சீரகம் அல்லது ஓமம் சேர்த்த நீர் அருந்துவது, பெருங்காயம் சேர்த்த மோர் குடிப்பது போன்றவை உதவும். தவிர அவை செரிமானத்தைச் சீராக வைக்கவும் உதவும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் காரணமாகவே அது வாயுத்தொல்லையை ஏற்படுத்துகிறது. இத்தகைய உணவுகளை நாம் சாப்பிடும்போது நம் சிறுகுடலில் செரிமானமாகும்போது அவை நொதிக்க வைக்கப்படும். அந்நிலையில் வாயு உற்பத்தியாகிறது.

இத்தகைய உணவுகள் வாயுத்தொந்தரவைத் தருகின்றன என்றால் முடிந்தவரை அவற்றைத் தவிர்ப்பதும், நிறைய திரவ உணவுகள் சாப்பிடுவதும் அவசியம்.

உணவுகளை நன்கு மென்று சாப்பிட வேண்டியதும் மிகமிக முக்கியம். அவசரமாக விழுங்குவதும் வாயுத்தொந்தரவை ஏற்படுத்தும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/0pHefKQ

Post a Comment

0 Comments