புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர், ஆள்வாயம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சிறுதெய்வ வழிபாட்டுக் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் கோயில்களில் நேர்த்திக்கடனாக பக்தர்கள் கோயில் மணிகளை கட்டி வந்திருக்கின்றனர். இந்தக் கோயில்களில் உள்ள பெரிய, சிறிய மணிகள் சமீபகாலங்களில் திருடு போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், கோயில் மணிகளைத் திருடிக் கொண்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்பிச் செல்வதாக அந்தப் பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சம்மந்தப்பட்ட ஆட்டோவை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றிருக்கின்றனர். அப்போது, ஆட்டோவில் சென்ற கும்பல் மீது பொதுமக்கள் கற்களை வீசியும் தாக்கியிருக்கின்றனர்.
புதுக்கோட்டை மச்சுவாடி அருகே ஆட்டோ சென்றபோது, ஆட்டோவை மறித்து அதில் பயணித்த குழந்தைகள் உட்பட 6 பேரை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். மேலும், ஆட்டோவையும் அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இதில், ஆட்டோவில் பயணித்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்து வந்த கணேஷ் நகர் போலீஸார், காயமடைந்த அனைவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில், 10 வயது சிறுமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், அந்தச் சிறுமி நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்ததார். பொதுமக்கள் தாக்கியதால்தான் சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் புதுக்கோட்டையில் பெரும், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் தங்கள் கோயில் மணிகளை திருடிக் கொண்டு, ஆட்டோவில் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சத்தியநாராயணசாமியிடம் பேசினோம். ``பல்வேறு பகுதிகளுக்கு அவ்வப்போது, குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவோம். அப்படித்தான் புதுக்கோட்டைக்கு சுற்றுலா வந்தோம். நாங்கள் வைத்திருந்த மணிகள் உட்பட அனைத்து பொருள்களும் எங்களுக்குச் சொந்தமானது. புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயிலுக்கு காணிக்கையாகக் கொடுக்க வந்தேன். ஆனால், மது போதையில் வந்த சிலர் எங்களைத் திட்டமிட்டு தாக்கினர். கல்வீசி தாக்குதல் நடத்தி என் மகளைக் கொன்றுவிட்டனர். சம்மந்தப்படவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்" என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, ``ஆட்டோவில் சென்றது கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த சத்தியநாராயணசாமியும், அவர் குடும்பத்தினரும் என்பதும் தெரியவந்திருக்கிறது. அவர்களிடம் இருந்த மணிகள், பித்தளை பொருள்களைக் கைப்பற்றியிருக்கிறோம். சத்தியநாராயணசாமி மீது ஏற்கெனவே திருட்டு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில், அவர்கள் அனைவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசரித்து வருகிறோம். கிராம மக்கள் தங்களுடைய கோயிலில் உள்ள பொருள்கள் காணாமல் போனதாக புகார் கொடுத்திருக்கின்றனர். அதன்பேரிலும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தரப்பில் குழந்தைகள் மீது ஏதும் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் தற்போது, 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், இதனை கொலை வழக்காக பதிவுசெய்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/UMLsaRB
0 Comments