``10,000 முதல் 13,000 உக்ரைனிய படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” - உக்ரைன் அதிபரின் ஆலோசகர்

உக்ரைன் அதிபரின் உயர்மட்ட ஆலோசகர் ஒருவர், ஒன்பது மாதக்கால ரஷ்யா - உக்ரைன் மோதலின் போது உக்ரைனிய படைவீரர்கள் 10,000 முதல் 13,000 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறியுள்ளார். அதோடு ரஷ்யப் படைகள் உக்ரைனுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதாக உக்ரைனின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு உக்ரைனின் பாக்முட் மற்றும் அவ்திவ்கா உட்பட ஒரு டஜன் நகரங்கள் ரஷ்யாவின் முக்கிய இலக்காக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை (1-12-22) அன்று , உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உயர்மட்ட ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக், போரில் கொல்லப்பட்ட உக்ரைனிய வீரர்கள் பற்றிய புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அதே நேரத்தில் காயமடைந்த உக்ரைனிய வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமானது என்றும் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ``பலியான உக்ரைனிய வீரர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எங்களிடம் இருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் மோதலின் போது உக்ரைனிய படைவீரர்கள் 10,000 முதல் 13,000 பேர் வரை கொல்லப்பட்டனர்” என்றார்.

இருப்பினும், ரஷ்யா - உக்ரைன் மோதலின் போது உக்ரைனிய படைவீரர்கள் 10,000 முதல் 13,000 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் எந்தவித அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களையும் வெளியிடவில்லை . கடந்த ஜூன் மாதத்தில், போடோலியாக் கூறுகையில், `இந்த ஆண்டு மிகவும் கடுமையான சண்டை மற்றும் ரத்தக்களரிகளில் ஒவ்வொரு நாளும் 200 வீரர்கள் வரை இறக்கின்றனர்’ என்றிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை (30-11-22) அன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக ஆணையத்தின் தலைவரான ஊர்சுலா வோன் டெர் லெயென் (Ursula von der Leyen) 100,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார் . ஆனால் அவை தவறானவை என்றும் அந்த எண்ணிக்கை கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த இருவரையும் குறிப்பிடுவதாகவும் போடோலியாக் கூறியுள்ளார்.

கடந்த மாதம், அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர், ஜெனரல் மார்க் மில்லி, ``இதுவரை 40,000 உக்ரைனிய குடிமக்களும், 1,00,000 ரஷ்ய வீரர்களும் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம். அநேகமாக உக்ரைன் தரப்பிலும் இதேதான்” என்று அவர் கூறியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம், திங்களன்று வெளியிட்ட அதன் சமீபத்திய வாராந்திர புது விவரங்களின்படி, உக்ரைனில் 6,655 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 10,368 பேர் காயமடைந்ததாகவும் பதிவு செய்துள்ளதாகக் கூறியது. ஆனால் இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தியவை மட்டும் தான் என்றும் இன்னும் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் மீதான மோதலின் போது மின்உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டதில் உக்ரைன் மக்களுக்கு மின்தடை ஏற்பட்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் தெற்கு கெர்சன் பகுதியை உக்ரைன் மீட்டதைத் தொடர்ந்து, ரஷ்யப்படைகள் பின்வாங்கின. ஆனால் அதைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா பீரங்கித் தாக்குதல் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு கெர்சன் நகரத்தின் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீட்கப்பட்டது என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.



from Latest News https://ift.tt/rVHjAMf

Post a Comment

0 Comments