அறநிலையத்துறையை சீண்டும் சுப்பிரமணியன் சுவாமி... எதிர்க்கும் திமுக - பின்னணி என்ன?!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க கோரி, தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், "அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நீண்டகால கட்டுப்பாட்டின் காரணமாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இந்து கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களின் அவலநிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

இது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிரானது. இது தொடர்பாக நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் கோயிலின் எந்த மதப் பணிகளையும் எந்த அரசாங்கமும் கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஒரு கோயிலில் நிதி முறைகேடு இருந்தால், கோயிலின் நிதி மற்றும் இணைக்கப்பட்ட மதச்சார்பற்ற செயல்பாடுகள் நிதி முறைகேட்டை நிவர்த்தி செய்ய எடுத்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே.

இது சம்பந்தமாக, மேற்படி தீர்ப்பின் பத்திகள் எண். 64, 65, 66, 67 மற்றும் 68 க்கு உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன். இது போதுமான தெளிவுடன் சிக்கலைத் தீர்க்கிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாநில அரசு இணங்க வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்கள் மற்றும் மத அமைப்புகளை விடுவிக்க வேண்டும். தவறினால் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தமிழக அரசு மீது சட்ட நடவடிக்கை எடுக்க எனக்கு உரிமை இருக்கிறது" என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு திடீரென சேகர்பாபு துறையை சுப்பிரமணியன் சுவாமி சீண்டியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "நாங்கள் தொடர்ந்து 40 ஆண்டுகளாக தமிழக அரசு, ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி வருகிறோம். எந்த விதத்திலும் அரசு கோயில்களை கட்டுப்படுத்தக்கூடாது. இந்து சமய அறநிலையத்துறையின் பணி நிர்வாகத்தில் பிரச்னை வந்தால் மேற்பார்வை செய்யும் அமைப்பாகத்தான் இருக்க வேண்டும். அதை விடுத்து அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்துவது என்பது சட்டத்தை மீறிய செயலாகும்.

இந்து சமய அறநிலையத்துறை வசம் ஆலயங்கள் இருப்பதால் ஆகம விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவது இல்லை. மிக மோசமான முறையில் ஊழல் இருக்கிறது. கோயில்கள் அறங்காவலர்களின் மேற்பார்வையில் தான் இருக்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அறநிலையத்துறையின் சட்டமே அதை தான் சொல்கிறது" என்றார்.

இந்து சமய அறநிலையத்துறை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "சுப்பிரமணியன் சுவாமி எழுதியிருப்பதில் எந்த நியாயமும் இல்லை. அறநிலையத்துறையை கொண்டு வரவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அதனால் தான் 1920-ம் ஆண்டு கொண்டுவருகிறார்கள். பார்ப்பனிய சிந்தனையாளர்களிடம் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்கிற காரணத்தினால் தான் நீதி கட்சியினுடைய ஆட்சியில் சட்டம் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது.

அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுபோனால் பாதிப்பு ஏற்படும். இஸ்லாம் நிலம் தனியாருடையது. எனவே அவர்களின் பராமரிப்பு வேறு. ஆனால் கோயில்கள் எல்லாம் மக்களுடைய பணம், நிலம். எனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. அரசர்கள் கொடுத்த நிலம், அவர்கள் கட்டிய கோயில்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இப்போது தனியாரிடம் ஏன் கொடுக்க வேண்டும். பார்ப்பனிய சிந்தனையாளர்களின் கையில் இருந்த பொது தான் ஐம்பொன் சிலைகள் திருடுபோனது. பிறகு எப்படி நீங்கள் பாதுகாப்பீர்கள். அவருடைய கேள்வியில் நியாயம் இல்லை. இன்றுவரை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் பாட முடியவில்லையே ஏன்?. இந்த ஒன்று போதும் ஆகம விதிப்படி தான் எல்லாம் நடக்கிறது என்பதற்கு. ஊழல் என்பது பொதுவான குற்றச்சாட்டு. கோயில் சொத்துக்களுக்கும் அவர்களுக்கு கையை சுரண்டுகிறது" என்றார்.



from Latest News https://ift.tt/VrDvZkl

Post a Comment

0 Comments