குமரி: ஒர்க்‌ஷாப்பில் நின்ற இன்ஸ்பெக்டர் ஜீப்பை திருடி வசூல் வேட்டை, அலப்பறை... போதை ஆசாமிகள் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் ஐந்துபேர் சுற்றித் திரிந்திருக்கிறார்கள். தாடியும், மீசையும், அழுக்கான கலர் சட்டை, பேன்ட்டுகளை அணிந்தபடி குடிமகன்களின் அத்தனை தோரணைகளுடன் இருந்தவர்கள், கருங்கல் பஸ்டாண்டை ஜீப்பில் ரவுண்ட் அடித்திருக்கிறார்கள். வழியில் ஜீப்பை நிறுத்தி பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். சிறிது பணம் வசூலானதும் பூக்கடை சாலையில் உள்ள டாஸ்மாக் பாருக்குச் சென்று மது அருந்திவிட்டு, மீண்டும் பஸ்டாண்டைச் சுற்றி வந்து, வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். அதில் சிறு தொகை கிடைக்கவே... மீண்டும் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வசூலில் இறங்கியிருக்கின்றனர் .

அவர்கள் பஸ்டாண்டை சுற்றி வந்த பாதையில் கருங்கல் காவல் நிலையமும் இருக்கிறது. இந்த நிலையில் காவல் நிலையம் அருகிலேயே ஜீப்பை நிறுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருவர் டிரைவர் இருக்கையிலும், மற்றொருவர் அதிகாரி போல முன் சீட்டிலும் இருக்க... மற்ற மூவரும் போலீஸ் போன்று வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அந்தப் பணத்தில் மது வாங்கி, ஜீப்புக்குள் இருந்தவரிடம் பவ்யமாக கொடுப்பதும் என அலப்பறை செய்திருக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட ரூபன், போஸ்கோ

அப்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த பெருமாங்குழி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற வாலிபரை போலீஸ் ஜீப்பில் இருந்தவர்கள் நிறுத்தியிருக்கிறார்கள். ஃபைன் போடாமல் இருக்க 200 ரூபாய் கொடு என கேட்டனர். அஸ்வினும் 200 ரூபாய் கொடுத்துவிட்டார். அதிலும் அடங்காத அவர்கள், அஸ்வினின் செல்போனை எடுத்து போன் கவரில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு போனை கொடுத்துள்ளனர். ஹெல்மெட் போடாமல் வந்ததற்கு அபராதமே 1,000 ரூபாய்தான், இவர்கள் 2,200 ரூபாய் பறித்துவிட்டார்களே என நினைத்த அஸ்வினுக்கு, அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. நீங்க எந்த போலீஸ் என அஸ்வின் கேட்டுள்ளார். அதற்கு நாங்கள் கிரைம் பிராஞ்ச் எனக் கூறியிருக்கிறார்கள்.

சந்தேகம் வலுத்ததால் அஸ்வின் தனது செல்போனில் அந்த ஜீப்பையும், அதில் வந்தவர்களையும் போட்டோ எடுத்தார். அந்த போட்டவை அருகில் உள்ள கருங்கல் காவல் நிலையத்தில் காட்டி புகார் அளித்தார். நம்ம ஏரியாவில், நமக்கே தெரியாமல் போலீஸ் வாகன சோதனையில் ஈடுபடுகிறதா என சந்தேகமடைந்த கருங்கல் போலீஸார், அந்த ஜீப்பில் வந்தவர்களைப் பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் ஜீப்பை எடுத்துவிட்டு தப்பிவிட்டனர். அஸ்வின் கொடுத்த போட்டவை வைத்து விசாரணை நடத்தியதில் அது குலசேகரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் ஜீப் என்பதும், அதை பழுதுபார்க்க சிராயன்குழியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் விட்டிருந்ததும் தெரியவந்தது. அந்த ஒர்க்‌ஷாப் உரிமையளரின் நண்பர்களான குடிமகன்கள் சேர்ந்து அந்த ஜீப்பை எடுத்துவந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. வசூல் வேட்டை முடிந்ததும் அந்த ஜீப்பை அதே ஒர்க்‌ஷாப்பில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

விஷ்ணு

போலீஸ் ஜீப்பை திருடிவந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு போலி போலீஸாக வலம்வந்த சிராயன்குழி பகுதியைச் சேர்ந்த ரூபன், விஷ்ணு, போஸ்கோ ஆகியோர் அப்பகுதியில் போதையில் மட்டையாகி கிடந்தனர். அவர்களை உண்மையான போலீஸார் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சிக்குழி பகுதியைச் சேர்ந்த ஹிட்லரையும் மற்றொருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். ஒர்க்‌ஷாப்பிலிருந்து இன்ஸ்பெக்டர் ஜீப்பை எடுத்துவந்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட குடிமகன்களின் செயல் போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News https://ift.tt/IN0HxPl

Post a Comment

0 Comments