சர்ச் நிகழ்ச்சியில் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; கேட்டரிங் நிறுவன லைசன்ஸ் ரத்து!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி செயின்ட் தாமஸ் சர்ச்சில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 29) ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 190 பேருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட சுமார் நூறு பேருக்கு ஒவ்வாமையும், உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. சுமார் 70 பேருக்கும் மேல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் இவர்கள் ரானி, அடூர், கொம்பநாடு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இது குறித்து புகாரின் பேரில் விழாவில் உணவு வழங்கிய 'ஓவன் ப்ரெஸ்' கேட்டரிங் நிறுவனம் மீது கீழ்வாய்ப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

உணவு விஷமானதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்

`ஓவன் ப்ரெஸ்’ கேட்டரிங் நிறுவன உரிமையாளர் மனுவின் பெயரை குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஞானஸ்நானம் நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதே உணவு அன்றைய தினம் வேறு இரண்டு நிகழ்ச்சிகளில் பரிமாறப்பட்டதாகவும், அதை சாப்பிட்டவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என கேட்டரிங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியில் உணவு விஷத்தன்மையாக மாறியதால், கேட்டரிங் நிறுவனத்தின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பத்தனம்திட்டா மல்லப்பள்ளியில் உணவு விஷமாக மாறிய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு துறை கமிஷனருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்க் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து ஆலப்புழாவைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு துறையின் பறக்கும்படையினர் நேற்று இரவு செங்கனூரில் உள்ள கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தில் இருந்து சாம்பிள்கள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன.

சர்ச் நிகழ்ச்சியில் சாப்பிட்டு உடல் நலம் பாதித்தவர்கள்.

மேலும், கேட்டரிங் நிறுவனத்தின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு சட்டப்படி அந்த நிறுவனத்தின் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அந்த கேட்டரிங் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/xWHdbmc

Post a Comment

0 Comments