புதுச்சேரி:``ஆளுநர் சென்னாரெட்டியை ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா?” - அதிமுக-வை தாக்கும் திமுக

``தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த ஆளுநர்கள், இப்போது பதவிக்கு வந்ததும் கசக்கிறார்களா?” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் திமுக-வை கடுமையாக விமர்சித்திருந்தார் புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா பேசும்போது, ```ஆளுநர் என்பவர் மாநில அரசின் அடிமையல்ல’ என ஆளுநருக்கு காவடி தூக்கும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகனுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் ’ஆட்டுக்கு தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையற்றது’ என்ற வைர வரிகளை நினைவூட்டுகிறேன். அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் அ.தி.மு.க தனது சுயத்தை இழந்து கொள்கைகளை மறந்து பா.ஜ.க-வுக்கு அடிமையாகி அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளதை அவரின் அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

தமிழக ஆளுநர் ரவி

தமிழ்நாடு ஆளுநர் தனது உரையில் தமிழ்நாடு என்று குறிப்பிடுவதையும், மதச்சார்பின்மை, சமத்துவம், திராவிடம், சமூக நீதி என்று குறிப்பிடுவதையும், மக்கள் நலனுக்காக போராடிய டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இவர்களின் பெயர்களை உச்சரிப்பதையும் சித்தாந்த ரீதியில் தவிர்க்கிறார் என்றால் தமிழனாக யார்தான் அதை பொறுத்துக் கொள்வார்? அதற்காகத்தான் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ராஜதந்திர முறையில் சட்டமன்ற விதி 17–ஐ தளர்த்தி தீர்மானத்தின் மூலம் ஆளுநரை கண்டித்ததுடன், அவரின் சொந்த கருத்து அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று அறிவித்தார். தனது மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல் ஆட்சி செய்த ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால், இச்செயலை வரவேற்று பாராட்டி இருப்பார்.

அவரின் ஆட்சிக் காலத்தில் ஆளுநராக சென்னாரெட்டி கொடுத்த அத்தனை குடைச்சல்களுக்கும் சளைக்காமல் எதிர்வினை ஆற்றிய ஜெயலலிதா, அந்த சென்னாரெட்டி புதுச்சேரி பொறுப்பு ஆளுநராக பதவியேற்க வந்தபோது திண்டிவனத்தில் அ.தி.மு.க தொண்டர்களை வைத்து ஆளுநர் வாகனத்தை தடுத்து நிறுத்தி இரண்டு மணிநேரம் காக்க வைத்து முட்டை வீச்சு, செருப்பு வீச்சு நடத்தி அவமானப்படுத்தியதை நாடே அறியும். ஆளுநர் நடத்துகின்ற விழாக்களில் தானும் கலந்து கொள்ள மாட்டேன், அதிகாரிகளும் கலந்து கொள்ளக் கூடாது என்று முரட்டுத்தனமாக ஆளுநரை எதிர்த்து அரசியல் செய்தவர் ஜெயலலிதா.

ஆனால், இன்று அந்த கட்சியில், புரட்சித் தலைவி அம்மா என்று ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் போன்றோர் அவரின் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு, பா.ஜ.கவின் கைக்கூலியாக அவர்களிடத்தில் மண்டியிட்டு தங்களின் தலைவிக்கு துரோகம் இழைத்து வருவதுடன் மாநில உரிமையை குழித்தோண்டி புதைத்து வருகிறார்கள். அதில் அன்பழகனும் ஒருவர்.

ஸ்டாலின்

ஆளுநர் என்பவர் ஆளும் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசிற்கும் இடையயோன போஸ்ட் மேன் அவ்வளவுதான். தனது இயலாமையை மூடி மறைத்து தமிழ்நாட்டு முதல்வரை கண்டித்து அரசியல் அனுதாபம் தேடும் அன்பழகனை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது. பிரிவினை அர்த்தங்களை வார்த்தை ஜாலங்களால் புகுத்தி தினம்தோறும் அரசியல் செய்து கொண்டிருக்கும் பா.ஜ.கவை கண்டிக்காத அன்பழகன் புதுச்சேரி மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறார். தமிழ்நாடு என்பதை பிரிவினைவாதம் என்று கூறுவதற்கு அன்பழகனுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? தமிழ்நாடு என்ற பெயர் வந்த வரலாறு தெரியுமா அன்பழகனுக்கு? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று 60 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கம் தியாகத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற வைத்துதான் இந்த பெயர் இன்றைக்கு நிலைத்திருக்கிறது.

இந்த வரலாற்றையாவது அண்ணாவின் பெயரை தனது கட்சியில் வைத்திருக்கின்ற அன்பழகன் போன்ற அ.தி.மு.க காளான் குட்டிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் சர்ச்சை வந்தபொழுது, புதுச்சேரியில் உள்ள மாணவர்கள் எல்லாம் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று கூறிவிட்டு,  இன்றைக்கு தமிழ்நாடு என்பது பிரிவினை என்று அறிக்கை விடுவது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழினத்திற்கு துரோகம் இழைக்கும் செயலாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால் மொழிப்போரில் முன்னின்று, தமிழ் உணர்வை ஏற்றுள்ள மண்ணில் வசிக்கும் புதுச்சேரி மக்கள் இந்த அரசியல் அரங்கில் இருந்து விரட்டி அடிப்பார்கள் என்பதை அன்பழகன் உணர வேண்டும்.

புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு குறித்தும், பால் விலை உயர்வு குறித்தும், உயர்த்த உள்ள மின்கட்டணம் குறித்தும், பா.ஜ.கவின் மாற்றான்தாய் மனப்பான்மை குறித்தும் அன்பழகன் பேசுவது எப்போது? இன்றைக்கு புதுச்சேரி மாநிலத்தில் எதிர்க்கட்சித் தகுதியில் அமர்ந்துள்ள தி.மு.கவை பற்றியும், அதன் தமிழக தலைவர்கள் பற்றியும் தனது காழ்ப்புணர்ச்சியையும், கையாளாகத்தனத்தையும் காட்டுவதற்காக இதுபோன்ற அரை வேக்காட்டு அறிக்கைகளை அன்பழகன் வௌியிட்டால் தி.மு.கழகத்தினரின் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்” என காட்டமாக குறிப்பிட்டார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2BfO0Hc

Post a Comment

0 Comments