``வழி வழியாக வரக்கூடிய தலைமுறை சரியாக இருந்தால்..!’’ - வாரிசுக்கு விளக்கம் கொடுத்த ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் 2 நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று மாலை காட்பாடியிலுள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்துக்குச் சென்ற அவர், அங்கு புதிதாகக் கட்டப்பட்டிருந்த ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி’ மாணவர் விடுதி மற்றும் ‘பேர்ல்’ ஆராய்ச்சிக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வி.ஐ.டி பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன், ‘‘நம்முடைய இந்த பல்கலைக்கழகத்துக்கு வந்திருக்கின்ற இரண்டாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலில் வந்த முதலமைச்சர் கலைஞர். 1998-ல் ஒருமுறையும், 2012-ல் ஒருமுறையும் வருகை தந்தார். கலைஞர் முதல் முறை வந்தபோது, இது கல்லூரியாக இருந்தது. இரண்டாவது முறை அவர் வந்தபோது பல்கலைக்கழகமாக மாறியிருந்தது. முதல் முறை வந்தபோது, கலைஞர் பேசுகையில், ‘வி.ஐ.டி யாரும் எட்டாத இடத்துக்குப் போகும்’ என்றார். 1958-ம் ஆண்டு நானும் என் அருமை நண்பர் முரசொலி செல்வமும் லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்.

புதிய கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

அந்தச் சமயம், முரசொலி செல்வம் என்னை அழைத்துக்கொண்டுபோய் கலைஞரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிலிருந்து அவர் மறைகின்ற வரை 60 ஆண்டுகள் தொடர்பில் இருந்தேன். இடையில் கொஞ்சம் பிரச்னை இருந்தாலும், என்றைக்கும் அவரை நான் மறந்ததில்லை. அவரும் என்னை மறந்தது இல்லை. 1967-ல் வந்தவாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, மனுவை அளித்துவிட்டு அவரைப் போய் வீட்டில் பார்த்தேன். அப்போது அவர் சொன்னார். ‘உன்னால என் குடும்பமே ரெண்டாகிப் போய்ச்சிடா..’ என்று! என்னை எதிர்த்து வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் தர்மலிங்கம். அவர் அனைவருக்கும் வேண்டியவர். கலைஞரோ, ‘எங்கள் வீட்டுப் பெண்களெல்லாம் தர்மலிங்கம் பக்கம். மாறனும், செல்வமும் உன் பக்கம். நான் நடுநிலைமையாகிவிட்டேன். நீ போய் அண்ணாவைப் பார்’ என்றார். கடைசியாக அண்ணாவைப் பார்த்து முடிவு எடுத்தோம்’’ என்று இன்னமும் விரிவாக பழைய நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘வி.ஐ.டி வேந்தர் விசுவநாதனை நான் ‘விச்சு’ என்று சொல்லிதான் பழக்கம். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். எம்.ஜி.ஆரை இவருக்கு அறிமுகம் செய்து வைத்ததும் நான்தான். விசுவநாதனிடம் மோட்டார் சைக்கிள் இருந்தது. ஒருமுறை நாங்கள் இரண்டுப் பேரும் அந்த மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்று எதிரே வந்த எம்.ஜி.ஆரின் வண்டியில் இடித்து நின்றோம். இறங்கிவந்த எம்.ஜி.ஆர், ‘என்ன இப்படி வந்திருக்கிறீங்க...’ என்றார். ‘உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறோம்’ என்றேன். ‘இடித்த வேகத்தில், பார்க்க முடியாத இடத்துக்கு போயிருப்பீங்க...’ என்றார் எம்.ஜி.ஆர். அப்போதுதான் விசுவநாதனை அழைத்து எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்தினேன். ஆக, எம்.ஜி.ஆருக்கு இங்கு சிலை வைத்திருக்கிறீர்கள்.

வி.ஐ.டி-யில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றியபோது...

ஆனால், முதன் முதலாக உங்களை (விசுவநாதனை) எம்.பி-யாக நிற்க வேண்டும் என்பதற்காக பிள்ளையார் சுழிப்போட்ட கலைஞருக்கு சிலை ஏன் வைக்கவில்லை என்று நான் கேட்கவில்லை; கேட்கவும் மாட்டேன். முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்தபோது, அவரின் ஆளுங்கட்சியில் விசுவநாதன் எம்.எல்.ஏ-வாக இருந்தார். கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். சட்டசபையில், எம்.ஜி.ஆரை ஆஹோ, ஓஹோ என்று விசுவநாதன் பேசுவார் என்று பார்த்தால், ‘எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் அவருக்கு எல்லாமே கிடைத்துவிட்டது. ஆனால், ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர் கிடைக்கவில்லை’ என்று பேசிவிட்டார். இதைக்கேட்ட கலைஞரோ, ‘துரை பார்த்தியா, விசுவநாதன் என்னப் பார்த்து என்ன சொல்லிட்டான் பார்த்தியா...’ என்றார். ஆனாலும், பின்னாளில் விசுவநாதன் அழைத்தவுடன் இரண்டு முறை வி.ஐ.டி-க்கு வந்து இங்கேயே தங்கினார் கலைஞர். அதுதான் கலைஞரின் குணம்’’ என்றார்.

இருவரையும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘‘வேலூரைக் கல்வியின் விளை நிலமாக மாற்றியவர் விசுவநாதன். இந்தியாவில் மட்டுமின்றி, உலகஅளவில் கல்வியில் சிறந்த நிறுவனமாக வி.ஐ.டி-யை விசுவநாதன் மாற்றியிருக்கிறார். இந்தப் புகழ்பெற்ற நிறுவனத்தில் மாணவர் விடுதி ஒன்றை அமைத்து அதற்கு ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி’ என்று பெயர் சூட்டியிருப்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்று. தலைவர் கலைஞர் பெயரைச் சூட்டியதற்காக முதலமைச்சராக மட்டுமல்ல, கலைஞரின் மகன் என்ற முறையிலும் நான் எனது நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு வேண்டுமானால் அவர் வேந்தர் விசுவநாதன் என்று அழைக்கப்படலாம். எங்களுக்கெல்லாம் அவர் வேலூர் விசுவநாதன் தான். ஏனென்றால் திராவிட இயக்க தூண்களில் ஒருவராக இருந்தவர்; இருந்துகொண்டிருக்கக் கூடியவர்; இருக்கப் போக கூடியவர். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

வி.ஐ.டி-யில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

வேண்டுமானால் அரசியலை விட்டு கொஞ்சம் ஒதுங்கியிருக்கலாம். கால் சட்டை பருவம் முதலே தந்தைப் பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் எழுத்துகளால் செதுக்கப்பட்டவர் அவர். 26 வயதில் ஒருத்தர் எம்.பி ஆனார் என்றால் அது விசுவநாதன்தான். இந்தியாவிலேயே ஒரு இளம் வயதில் எம்.பி-யாக அவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். அதிலிருந்து அவருக்கு ஏறுமுகம்தான். இப்போதும் நம்மோடு இருக்கிறார். அவரால் எனக்கு மட்டுமின்றி, இங்கு இருக்கும் அனைவருக்குமே பெருமைதான். விசுவநாதனின் பிள்ளைகள் மூன்று பேரும் அப்பாவைபோல செயல்பட்டிருக்கிறார்கள். இதேபோல, அரசியலில் செயல்பட்டால் ‘வாரிசு’ என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், கல்லூரிகளிலோ, வேறுவிதமான தொழில்களிலோ இருந்தால் அந்த விமர்சனம் வருவதற்கு வாய்ப்பில்லை. இப்படி எல்லா இடத்திலும் வழி வழியாக வரக்கூடிய தலைமுறைச் சரியாக இருந்தால், வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த வி.ஐ.டி-யே சாட்சியாக, ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது’’ என்றார்.



from Latest News https://ift.tt/qbGr8fm

Post a Comment

0 Comments