``தப்பு செய்தால் தப்பிக்க முடியாது என்ற பயம் வர வேண்டும்’’ - காவல் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, வடக்கு மண்டல ஐ.ஜி டாக்டர் கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி மற்றும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், எஸ்.பி-க்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘‘சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது, புலனாய்வு செய்வது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது ஆகிய மூன்றும் காவல்துறையின் மூன்று தூண்கள்.

ஆய்வுக்கூட்டம்

இப்பணிகளில் அதிக பளு இருக்கக் கூடாது என்றால், அதற்குக் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது மிக முக்கியம். காவல்துறை அதிகாரிகள் வழக்கிற்காக மட்டும் போகாமல், சாதாரணமாக அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் பேச வேண்டும். இதைச் செய்தாலே சட்டம்-ஒழுங்குப் பிரச்னை கிராமங்களில் வராது. விளிம்பு நிலை ஏழை, எளிய மக்கள், பெண்கள் உங்கள் உதவித் தேடி வரும்போது அவர்களுக்குத் துணையாக இருந்து நீதி பெற்றுத் தர வேண்டும்.

எப்.ஐ.ஆர் போட்டுவிட்டால் மட்டுமே பிரச்னை தீராது. அவற்றில் குற்றப் பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்து வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அச்சம் வரும்; இந்த ஆட்சியில் தப்பு செய்தால் தப்பிக்க முடியாது என்ற பயம் வரும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் மிகக் கடுமையாக ஈடுபட வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின்

சட்டம்-ஒழுங்கு பராமரிப்பின் போது வருவாய்த்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். காவல்துறை என்ற குடும்பத்தில் மாவட்டத்தின் எஸ்.பி தான், தலைவர் என்ற நினைப்பில் செயல்பட வேண்டும். தங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் நிம்மதியாக நேர்மையாகப் பணியாற்ற வழி செய்தாலே மாவட்டத்தில் அமைதி நிலவும். சட்டத்தின் ஆட்சி எவ்வித சிரமும் இன்றி நிலைநாட்டப்படும். காவல்துறையின் மூன்று தூண்களையும் கட்டிக் காப்பாற்றினாலே உங்கள் மாவட்டம் சிறக்கும், இந்த மண்டல ஆய்வின் நோக்கமும் வெற்றி பெறும்’’ என்றார்.



from Latest News https://ift.tt/kb290To

Post a Comment

0 Comments