திருப்பூரில் தமிழகப் பெண்களுக்கு கட்டாய விடுப்பு, வடமாநிலத்தவர்களுக்கு வேலை; வைரல் வீடியோ பின்னணி!

திருப்பூரில் கடந்த டிசம்பர் மாதம், ஒரு பின்னலாடை நிறுவனம் தமிழகப் பெண் தொழிலாளர்களுக்குக் கட்டாய விடுப்பு கொடுத்துவிட்டு, வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பின்னலாடைத் தொழிற்சாலைகளில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த கூலி, விடுப்பில்லாமல் பணியாற்றுவது ஆகியவற்றுக்காக தொழிற்சாலை நிர்வாகங்களும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன.

திருப்பூர் பின்னலாடை

திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சிக்கு தென்மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களின் பங்களிப்பு அதிக அளவில் இருந்து வந்த நிலையில், தற்போது கூலியைக் காரணம் காட்டி தமிழகப் பெண் தொழிலாளர்களுக்கு பின்னலாடை நிறுவனங்கள் வேலை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் திருப்பூர், வேலம்பாளையம் தண்ணீர்ப்பந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனம், தமிழகத்தைச் சேர்ந்த பெண் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து விட்டு, குறைந்த கூலிக்கு வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை அளித்துள்ளது.

திருப்பூர் பின்னலாடை

இதனால் ஆத்திரமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும்போது, வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறுகையில், ``கடந்த சில ஆண்டுகளாக பனியன் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இத்தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தமிழகத் தொழிலாளர்கள் ஏற்கெனவே வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வடமாநிலத்தவர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், நிறுவனங்கள் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

போராட்டம்

இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. தண்ணீர்ப்பந்தலில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் நாளொன்றுக்கு ரூ.364-க்கு தமிழகத்தைச் சேர்ந்த நிரந்தரப் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆர்டர் குறைவானதைக் காரணம் காட்டி, அவர்களுக்குக் கட்டாய விடுப்பு அளித்துவிட்டு, ரூ.250-க்கு வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம் வேலை அளித்துள்ளது. பெண் தொழிலாளர்களின் போராட்டத்துக்குப் பின் மீண்டும் அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இது, தமிழக மக்களின் வாழ்வாதாரம் தொடர்பானது என்பதால், பனியன் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் தமிழகத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும். தொழில் நலிவடைந்து வேலைவாய்ப்பு குறையும் போது ஏற்கெனவே வேலையில் உள்ள தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துவிட்டு புதிய தொழிலாளர்களை தொழில் நிறுவனங்கள் பணியமர்த்தக் கூடாது’’ என்றார்.



from Latest News https://ift.tt/fP1uYky

Post a Comment

0 Comments