முதன்முறையாக இந்திய ராணுவக் கல்லூரியில் இணைந்து பயிலும் அண்ணன், தங்கை!

டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில், ஆந்திராவைச் சேர்ந்த அண்ணன் - தங்கை இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். ராணுவப்பள்ளியில் அண்ணன் - தங்கை இணைந்து படிப்பது இதுவே முதல்முறையாகும்.

ஆணுக்கு பெண் சரிசமம்; இன்று ஆண்களுக்கு நிகராக எல்லாத்துறையிலும் பெண்கள் கோலோச்சுகின்றனர். ராணுவம், விண்வெளி என்று அனைத்திலும் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். இதில் அரிதான நிகழ்வாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண் என களமிறங்கி சாதனை புரிவதுண்டு.

ஆக்னஸ் - ஸ்ருஜன்

அவ்வகையில், ஆந்திராவை சேர்ந்த அண்ணன் - தங்கை இருவரும் ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ் எனப்படும் இந்திய இராணுவக் கல்லூரியில் இணைந்து படித்து பயிற்சி பெற்று வருகின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த தெல்லூரி ஆக்னஸ் என்ற 13 வயது சிறுமி, 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 10-ம் வகுப்பு படித்து வரும் தனது அண்ணன் ஸ்ருஜனுடன் ராணுவப்பள்ளியில் இணைந்துள்ளார்.

இப்பள்ளியில் சேருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. கடும் போட்டித்தேர்வில், நாடு முழுவதும் இருந்து 5 பெண்கள் மட்டும் தேர்ந்தேடுக்கப்படும் நிலையில், அவர்களில் ஒருவராக சிறுமி ஆக்னஸ் இதை சாதித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ``என் அண்ணன் ராஷ்ட்ரீய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் (RIMC) சேர்ந்தவுடன், நானும் பள்ளியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்கேற்ப நுழைவுத்தேர்வுக்குத் தயாரானேன். தற்போது அதில் தேர்ச்சி பெற்று அண்ணன் படிக்கும் அதே ராணுவப்பள்ளியில் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ராணுவத்தில் சேரவேண்டும் என்பதே எங்கள் இருவரின் இலக்காகும்" என்றார்.

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக்கல்லூரி (RIMC), ஒரு சேவை வகை 'A' ஸ்தாபனமாகும். இது ராணுவப் பயிற்சிக் கட்டளை (ARTRAC) மூலம் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இது 13 மார்ச் 1922 அன்று வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் VIII அவர்களால் திறக்கப்பட்டது.

சக மாணவர்களுடன் ஆக்னஸ் - ஸ்ருஜன்

இந்த கல்லூரியானது தேசிய பாதுகாப்பு அகாடமி - கடக்வாஸ்லா, அதிகாரிகள் பயிற்சி அகாடமி - சென்னை மற்றும் இந்திய ராணுவ அகாடமி - டேராடூன் போன்ற பல ராணுவ மற்றும் குடியுரிமை நிறுவனங்களுக்கு அதிகாரிகளை உருவாக்கும் பள்ளி.

அகில இந்தியப் போட்டித் தேர்வு மூலம் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 11½ முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு இந்தக் கல்லூரி பொதுப்பள்ளிக் கல்வியை வழங்குகிறது. நூற்றாண்டு பெருமை கொண்ட இப்பள்ளியில், சென்ற ஆண்டில் இருந்துதான் பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/w2nCYrK

Post a Comment

0 Comments