``என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடர நினைக்கிறேன்” - கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு ஈரோடு பிளாட்டினம் மகாலில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்., பொறுப்பாளர் திருச்செல்வம் வரவேற்றார். எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

தொல்.திருமாவளவன்

மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, ``ஜோடோ யாத்திரை மூலமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்ற ராகுல் காந்தி நாட்டு  மக்களின் மனங்களை ஒருங்கிணைத்துள்ளார். அதன் தாக்கம் மக்கள் மத்தியில் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. நாடு தற்போது உள்ள சூழலில் தமிழகத்தில் மக்களை ஒருங்கிணைத்து செல்லும் தி.மு.க., ஆட்சி தொடர வேண்டுமானால் இத்தொகுதியில் இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும்,’’ என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ``காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண நிறைவு நாளில் பங்கேற்று விட்டு இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு வந்துள்ளேன். மத்தியில் மதவெறி கொண்ட, சனாதன ஆட்சி நடக்கிறது. அதை அகற்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியால் மட்டுமே முடியும் என்று கருதியே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இப்போதும் அந்த முடிவில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் உருவாக உள்ள கூட்டணிக்கு தி.மு.க. உற்ற துணையாக இருக்கும்.

இந்தியாவிலே காங்கிரஸும், இடதுசாரிகளும் ஒரே அணியில் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். அதை சாதித்து காட்டி வருபவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். சனாதனத்துக்காகவும், பெரு நிறுவனங்களுக்காகவும் தான் பா.ஜ.க. பணிபுரிகிறது.  பா.ஜ.க-வின் செயல்திட்டம் மதவெறியும், சனாதானமும் தான். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது நடந்த கொலைகள் ஆவணப்படமாக வெளி வந்து உள்ளது. ஒரு கொலைகார கும்பலிடம் நாடு சிக்கி இருக்கிறது. மோடியின் நண்பன் என்ற தகுதியை மட்டும் வைத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 10 இடத்துக்குள் வந்திருக்கிறார். இவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையால் மட்டுமே பா.ஜ.க. அரசை அப்புறப்படுத்த முடியும்.

கூட்டத்தின் ஒரு பகுதி

இதுபோன்ற சமயத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸின் வெற்றி மிக முக்கியமானது. இந்த வெற்றி காங்கிரஸுக்கு மட்டுமல்ல, முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆனது.  இந்த வெற்றியே தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை உறுதி செய்யும். காங்கிரஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி உருவாகும். இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும்.
எங்களுக்கும் காங்கிரஸுக்கும் ஈழம், தேசியம் தொடர்பாக மாற்று கருத்துகள் இருக்கலாம். சமூக நீதி என்று வரும்போது காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஒரே கொள்கையில் இருக்கிறோம். திராவிட அரசு என்பது சமூக நீதிக்கான அரசு. பா.ஜனதாவை ஆட்சி அதிகார பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்கு தி.மு.க.-காங்கிரஸ் இணைந்து இருக்கும் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், ``இந்த அணி, தேர்தலுக்காக உருவானது அல்ல. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே, காவிரி நதி நீர் பிரச்னையில் இணைந்து களம் கண்டோம். மக்கள் நலனுக்காக, கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட அணி. அதனால்தான், இக்கூட்டணி தொடங்கியது முதல் ஒரு கட்சி கூட விலகவில்லை. மாறாக, வேறு சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கே.எஸ்.அழகிரி

ஈரோடு இடைத்தேர்தலில், நான் போட்டியிடுவேன் என ஒரு மாவீரன் கூறினார். அதே கட்சியில் இருந்த ஒரு பெண், ‘நான் எதிர்த்து நிற்பேன். அந்த கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை’ எனக் கூறியதும், அவர் பின்வாங்கிவிட்டார். அவர்கள் கொள்கை அடிப்படையில் அமையாமல், சந்தர்ப்ப வாத கூட்டணியாக இணைந்துள்ளனர்.

சட்டப்பேரவையில் ஆளுநர், மாமியார் வீட்டில் இருந்து கோபித்து செல்வதை போல ஓடினார். தமிழ்நாடு என சொல்ல மறுத்த கவர்னர், மீண்டும் தமிழ்நாடு என சொல்கிறார். முதல்வரை தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். இது நம்முடைய ஒற்றுமையால் ஏற்பட்டது. நாம் அரசியல் யுத்தம் நடத்தி, வெற்றி பெற்று வருகிறோம்.

பா.ஜ.க சமர்பிக்கும் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கும். கர்நாடகத்துக்கு சிறப்பு நிதியாக, ரூ. 5,000 கோடி வழங்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு எந்த நிதியும் தரவில்லை. அதானி கொள்ளை அடிக்கிறார். அதுபற்றி நிதி நிலை அறிக்கையில் ஏதுமில்லை. விளை பொருளுக்கு ஆதார விலை அறிவிக்கப்படும் என மோடி அறிவித்து, 2 ஆண்டுகளாகியும் இதுவரை செயல்படுத்தவில்லை. எனவே, இந்த சர்வாதிகார ஆட்சி 2024-ல் அப்புறப்படுத்த வேண்டும். அதன் துவக்கமாக, கிழக்கு தொகுதியின் வெற்றி அமைய வேண்டும்” என்றார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

பின்னர், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் பேசுகையில்,
``நான் இந்த தொகுதியில் போட்டியிட காரணம், என் மகன் விட்டுச் சென்ற பணியை செய்ய வேண்டும் என்பதற்காகவும், அவனை இழந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவும் தான். இதை எனக்கு முன்பே காங்கிரஸ், கட்சியும், ஸ்டாலினும் உணர்ந்துவிட்டனர். நான் வயதானவன் என்றாலும், உள்ளத்தால் என்றும் இளமையாக இருக்கிறேன். எனக்கும், என் மகனுக்கும் சற்று இடைவெளி உண்டு. ஆனால், என் மகனுக்கும், ஈரோடு மக்களுக்கும் நல்ல இணக்கம் இருந்ததை இப்போது பார்க்கிறேன். அவர் விட்டுச் சென்ற பணியை தொடர நினைக்கிறேன்” என்றார்.

வைகோ

இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், ம.நீ.ம., தேர்தல் பொறுப்பாளர் அருணாசலம், முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் உள்பட பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.



from Latest News https://ift.tt/lLbDHiN

Post a Comment

0 Comments