’’ஏன், எதற்கு, எப்படி என்று எதை எடுத்தாலும் கேள்வி கேட்க வேண்டும். அந்த அறிவு இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும்" என்று அரசுப் பள்ளி மாணவர்களிடம் பேசி தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் .
சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருந்த இஸ்ரோ சிவன், தன் மனைவியுடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். பின்பு மாணவர்களுடன் பேசியவர், "தாழ்வு மனப்பான்மையை அறவே விட்டுவிட வேண்டும். உங்களைப் பார்க்கும்போது என் இளமைக் கால பருவம் நினைவுக்கு வருகிறது. அரசுப்பள்ளியில் படித்த நான் இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றிள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
நீங்களும் முயற்சி செய்து படித்தால் இஸ்ரோ தலைவரைவிட மிகப்பெரிய பதவிக்குச் செல்ல முடியும். அதற்கு தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி உங்களிடம் வேண்டும். அவ்வாறு மூன்றும் இருந்தால் இந்திய தேசம் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளது.
உங்கள் நண்பர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் அறிவு உள்ளது. அறிவை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அப்படித்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
உங்களை நீங்களே எப்போதும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். முடியுமென்று எண்ணுங்கள். நமக்கு அறிவு நன்றாக உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். நண்பர்களுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்.
சயின்டிஃபிக் டெம்பர் வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். அதாவது ஏன், எதற்கு, எப்படி என்று எதை எடுத்தாலும் கேள்வி கேட்க வேண்டும். அந்த அறிவு இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும்.
என் இளம் வயதில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வரவேண்டும் என்று எண்ணினேன். அதுதான் மிகப்பெரிய வேலையாக நினைத்திருந்தேன். பின்னாட்களில் எனக்குப் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றதால் இஸ்ரோ பணியில் சேர்ந்து தலைவர் பணியிடத்திற்கு உயர்ந்தேன்.
எனவே, நீங்கள் ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதையும் தாண்டி மிகப்பெரிய இடத்திற்கு நிச்சயமாக சென்றடைவீர்கள். நான் படிக்கும் காலங்களில் பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் படித்து முடித்து இந்த பதவிக்கு வந்தடைந்தேன்" என்று பேசினார்.
பின்பு மாணவ, மாணவியர் சிவனிடம் பல்வேறு சந்தேகங்களை கேட்டு பதில்களை பெற்றனர். இந்நிகழ்வில் புத்தகங்களை சிறப்பாக வாசித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் சிவன். இஸ்ரோவில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முத்து, இஸ்ரோ சிவனின் மனைவி மாலதி ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளி தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் வரவேற்க, ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.
from Latest News https://ift.tt/trJe3Xo
0 Comments