சத்தியமங்கலம் டு ஈரோடு கிழக்கு: 39 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை செல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

பெரியாரின் பேரனும், ஈவிகே சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்தவர். 74 வயதான இவருக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் சம்பத் என இரண்டு மகன்கள். ஆரம்பக் கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்திலும், பின்னர் கல்லூரிப் படிப்பை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் படித்தார்.

தொடர்ந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றதுடன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். அதன் பின்னர் ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார். 1984-ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதி எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த இளங்கோவன், 2000 முதல் 2002 வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.

பின்னர் 2003 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்தார். மீண்டும் 2-ஆவது முறையாக 2015 முதல் 2017 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பு வகித்தார். 2004-ல் கோபிசெட்டிபாளையம் தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். மீண்டும், 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியிடம் தோல்வி அடைந்தார். மீண்டும் கடந்த 2019-இல் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

இந்நிலையில், தனது மகன் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 39 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டப் பேரவைக்குள் நுழைந்துள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.



from Tamilnadu News https://ift.tt/Fzp7wfl

Post a Comment

0 Comments