``ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்” - துரை வைகோ

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் ம.தி.மு.க. கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சுழி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், மணமக்களை வாழ்த்தி பேசினார்.

துரை வைகோ

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, "ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது இவர் இந்தியாவின் முன்மாதிரியான முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். முழு வெற்றிக்கு காரணம் அவரின் செயல்பாடுகளே. குறிப்பாக கோடிக்கணக்கான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்க்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஸ்டாலின்

மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம், அரசுப்பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி அவரவர் வங்கிக்கணக்கில் மாதம் ஆயிரம் செலுத்த உத்தரவிட்டுள்ளார். 22 மாதம் சிறப்பாக ஆட்சி புரிந்ததற்காக மக்களால் வழங்கப்பட்ட நற்சான்றிதழாக தான் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி பார்க்கப்படுகிறது. ஈரோடு வெற்றி குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறுவது கண்ணாடி கூண்டிலிருந்து கல் எரிவது போன்றது. ஈரோடு தேர்தல் வெற்றி, தொகுதி மக்கள் ஏற்கனவே எடுத்த முடிவு என்பதால்தான் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்" என்றார்.



from Tamilnadu News https://ift.tt/vzN3rSJ

Post a Comment

0 Comments