மகாராஷ்டிராவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலுக்கு நெருக்கமான ராஜாராம் பாபு சஹாகாரி வங்கியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் கோடி ரூபாய் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக இந்த ரெய்டு நடந்ததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 14 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆடிட்டர் ஒருவரது அலுவலமும் அடங்கும்.
இந்த ஆடிட்டர் பெரிய பெரிய கம்பெனிகளுக்கு இடைத்தரகராக இருந்து பணத்தை மாற்றிக்கொள்ள உதவியாக இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ``போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வங்கியில் கணக்கு திறந்து அக்கணக்கிற்கு வேறு கம்பெனியில் இருந்து பணத்தை டிரான்ஸ்பர் செய்து அதனை இந்த வங்கியில் ரொக்கமாக எடுத்துள்ளனர். இதில் ஆடிட்டர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். அவர்தான் போலி கம்பெனி பெயரில் கணக்கு திறந்து அக்கணக்கிற்கு வரும் பணத்தை எடுத்து தனக்கு வரவேண்டிய கமிஷனை எடுத்துக்கொண்டு பாக்கியை சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு கொடுத்து இருக்கிறார்.
இக்கம்பெனிகள் அப்பணத்தை லஞ்சமாக கொடுக்கவோ அல்லது சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தவோ செய்துள்ளன. ஆனால் வங்கி நிர்வாகம் சந்தேகத்திற்கு இடமான இந்த பண பரிவர்த்தனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் திட்டமிட்டே மறைத்திருக்கிறது. 2011-ம் ஆண்டு விற்பனை வரித்துறை போலீஸில் கொடுத்துள்ள புகார் ஒன்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆடிட்டர் போலி கம்பெனி பெயரில் பொருள்களை விற்பனை செய்பனை செய்ததாக கூறி பெரிய கம்பெனிகளுக்கு போலி பில்களை கொடுப்பார். அந்த பில்களுக்கு தேவையான பணத்தை ஆர்.டி.ஜி.எஸ். முறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போலி நிறுவனங்களில் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும். ஆடிட்டர் அந்த பணத்தை வங்கியில் இருந்து ரொக்கமாக எடுத்து அதில் தனக்கு வரவேண்டிய கமிஷனை எடுத்துக்கொண்டு பாக்கி பணத்தை சம்பந்தப்பட்ட கம்பெனிகளிடமே கொடுத்துவிடுவார். சில நேரங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 30 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது” என்றார். இந்த பண பரிவர்த்தனையில் வங்கி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருக்கும் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
எனவேதான் வங்கியில் சோதனை நடத்த முடிவு செய்ததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 2011-ம் ஆண்டு விற்பனை வரித்துறை கொடுத்த புகாரில் வங்கியின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் போலி கம்பெனிகள் நடத்திய சட்டவிரோத பண பரிவர்த்தனையில் வங்கிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் சிக்கி இருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர ஐ.எல் அண்ட் எப்.எஸ் நிறுவனம் சட்டவிரோதமாக அரசு ஒப்பந்தங்களை பெற ஜெயந்த் பாட்டீல் உதவி செய்தாரா என்பது குறித்தும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த மே 22-ம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜெயந்த் பாட்டீலிடமும் விசாரணை நடத்தி இருக்கின்றனர். தற்போது வங்கி பிரசனையிலும் ஜெயந்த் பாட்டீல் சிக்குவார் என்று தெரிகிறது. ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
from Latest news https://ift.tt/OG9T38f
0 Comments