நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமம், அகத்தியர்பட்டி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் இந்த கிராமத்தின் பொன் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக நாய் தொல்லை அதிகம் இருந்துள்ளது. எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்ததுடன், சாலையில் செல்வோரை விரட்டிவிரட்டிக் கடித்துள்ளது.
சாலையில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோரை அந்த நாய் விரட்டிக் கடித்துள்ளது. குழந்தைகள் சாலையில் சென்றால் ஆவேசத்துடன் வந்து அவர்களைக் கடித்துள்ளது. வீட்டின் முன்பாக சாலையில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பிரீத்தி என்ற சிறுமி 6 வயதுள்ள மிதில், 10 வயது சிறுவன் சிவசங்கர் உள்ளிட்டோர் நாயிடம் கடிபட்டுள்ளனர்.
குழந்தைகளை மட்டுமல்லாமல் வயதான பெரியவர்களையும் அந்த நாய் கடித்துள்ளது. சுந்தர்ராஜன் (48) காந்திமதிநாதன் (76) வேலம்மாள் (61) உள்ளிட்டோரும் நாயிடம் கடிபட்டுள்ளனர். கடந்த இரு தினங்களில் மட்டும் அந்த நாய் அகத்தியர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 பேரைக் கடித்துள்ளது. நாயிடம் சிக்கிக் கடிபட்ட சிலர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
நாய்த் தொல்லை காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டும் நிலைமை உருவானது. அதனால் அந்த நாயைப் படிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அந்த நாயைப் பிடித்து கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தியதால் மக்கள் நிம்மதியடைந்தனர். அத்துடன், சாலைகளில் திரியும் நாய்கள், மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய் ஆகியவற்றுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி போடும் பணியை கால்நடைத் துறையினர் மேற்கொண்டனர்.
from Latest news https://ift.tt/OVbw0ci
0 Comments