மதுரை மாவட்டம் துவரிமானில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டம் குறித்து அதிகம் சொல்ல விரும்பவில்லை. இந்த கூட்டத்தால் ஒரு பிரோயஜனமும் இல்லை. கூட்டத்தில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தலைவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. ஒப்புக்கு சப்பான கூட்டமாக பார்க்கிறேன். இது ஒற்றுமை இல்லாத கூட்டணி. தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமர் என்கின்றனர். ஆனால், அவர் திருவாய் மலரவில்லை. காங்கிரஸ் குறித்தும் ஸ்டாலின் எதுவும் பேசவில்லை." என்றவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்,
அவரிடம், செந்தில் பாலாஜி சிகிச்சை குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறிய கருத்து பற்றிய கேள்விக்கு,
"எய்ம்ஸ், அப்பல்லோ போன்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ததாக சொல்லவில்லை. காவேரி மருத்துவமனையில் செய்ததாக சொல்கின்றனர். இதனால்தான் சந்தேகம் ஏற்படுகிறது. வாக்கிங் போனவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சந்தேகம் வலுக்கிறது. இந்த சந்தேகத்தினை தீர்க்க வேண்டியது அரசின் கடமை, முதலமைச்சரின் கடமை. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சரை விட்டு மறைமுகமாக பேசுவது தலைமைக்கு அழகல்ல.” என்றார்.
``மதுரையில் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கிறதே?" என்ற கேள்விக்கு,
``தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கூட்டணி கட்சிகள் எந்த கேள்வியும் கேட்காமல் வாயை வாடகைக்கு விட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற ஊழல், பட்டவர்த்தனமாக வெளியே தெரிகிறது. ஆனால் கூட்டணிக்கட்சிகள் கண்டுகொள்வதில்லை. தி.மு.க-விற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதில் கொடுப்பார்கள்.”
``நாடாளுமன்றத் தேர்தல் அ.தி.மு.க கூட்டணிக்கு தலைமை யார்?"
"மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் சொல்வது போல் நாங்களும் சொல்கிறோம். தி.மு.க கூட்டணியில் தொகுதி பிரிக்கும்போது பிரச்னை வரும். எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க-தான் தலைமை தாங்கும். அண்ணாமலையும் தலைமைதான் முடிவு செய்யும் என சொல்லியுள்ளார். தலைமை குறித்து அண்ணாமலை முரணாக சொல்லவில்லை. ஆளுநர் பிரச்னையில் தி.மு.க ஆட்சி கலைக்கப்படலாம். தி.மு.க ஆட்சி பல முறை கலைக்கப்பட்டுள்ளது.
"தமிழர் பிரதமர் என அமித்ஷா பேசியது" குறித்த கேள்விக்கு,
"தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித் ஷா சொல்லியிருக்கலாம். அல்லது கட்சியை வளர்க்க சொல்லி இருக்கலாம். இதை அளவுகோளாக எடுக்க தேவையில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள். இன்று இருக்கும் கூட்டணி நாளை இருக்காது. எனவே கூட்டணியை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது." என்றார்.
"நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது" குறித்த கேள்விக்கு,
"அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?. ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து, 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்துள்ளார். யார் யாரோ தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என்று சொல்ல முடியாது.
எங்களுக்கு போட்டி தி.மு.க-தான். அ.தி.மு.க vs தி.மு.க என்பது தான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை.
எத்தனையோ கட்சிகள் வரும், போகும். தி.மு.க vs பா.ஜ.க என்று பா.ஜ.க-வினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிசாமி விட மாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அ.தி.மு.கதான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? ஏன், அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா? அவர் சாதாரண ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தவர். அவருடைய உழைப்பால் உயர்ந்தார். அதுபோல எடப்பாடி பழனிசாமியும் உயர்வார்." என்றார்.
from Latest news https://ift.tt/gChMIzJ
0 Comments