சனன அரக சநதரச சழரல கடடபபடட அபரவ ஆலயம; சககலகள தரககம சரபஸவரர சநநத!

சென்னை தாம்பரம் அடுத்து உள்ளது மாடம்பாக்கம். இங்குதான் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இரண்டாம் பராந்தக சோழன் எனும் சுந்தர சோழரால், கி.பி. 10- நூற்றாண்டுக் (கி.பி.954-971) காலத்தில் முதலில் கட்டப்பட்டுள்ளது இந்தத் திருக்கோயில்.

அதற்கு பின் முதலாம் குலோத்துங்கச் சோழரால் கற்றளிக் கோயிலாக இந்தக் கோயில் மாற்றப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், இக்கோயிலின் அம்பிகையான 'தேனுகாம்பாள்' சந்நிதி பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, 18 தூண்களை உடைய மஹாமண்டபமானது என்கிறார்கள்.

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர்

திருத்தல வரலாறு!

கபில மகரிஷி, முக்தி பெற வேண்டி தவமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்து வந்தார். அப்போது, வழக்கத்திற்கு மாறாக இடது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு வலது கரத்தினால் சிவபூஜை செய்ததால் ஏற்பட்ட தோஷத்தினால் முக்திபேறு கிடைக்காமல், பூலோகத்தில் மீண்டும் பசுவாகப் பிறந்தார்.

பசுவாகப் பிறந்த கபிலருக்கு விமோசனம் அளித்து, அருளுவதற்காக இங்கு, சுயம்பு லிங்கமாக பரமேஸ்வரன் தோன்றினார். ஆனால், சிவலிங்கம் கண்களுக்குப் புலப்படாத வகையில் மண் புற்றில் இருந்துள்ளது. ஆனால், அந்த தெய்வப் பசு சுயம்பு லிங்க மூர்த்தி இருப்பதைத் தன் ஞானத்தினால் அறிந்து, சிவலிங்கத்தின் மேல் பாலைத் தானாகப் பொழிந்து வந்தது.

ஒருநாள் இதைக் கண்ட பசு மேய்ப்பவன் பசுவைக் கல்லால் ஓங்கி அடித்தான். பசு நகராமல் அப்படியே நின்றது. மறுபடியும் தன் கையில் உள்ள தடியால் பால் பொழியும் காம்பின் மீது அடிக்க மடி காம்பிலிருந்து ரத்தம் கொட்டியது. அடிப்பட்ட வலியைத் தாங்க முடியாமல் பசு தன் காலை எட்டி சுயம்பு லிங்க மூர்த்தின் மேற்பகுதியில் உதைத்து விட்டு ஒடி மறைந்தது.

உதைத்த இடம் காயமாகி ரத்தம் பெருகி, ஏரித் தண்ணீர் முழுவதும் ரத்தச் சிவப்பு நிறம் பரவியது. இதனைக் கண்டு பயந்த மேய்ப்பன், ஊர் மக்களை அழைத்தான்.

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருத்தலம்

இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் இறைவனை வேண்டினார்கள். அப்போது, மக்களுக்குக் காட்சியளித்த சிவபெருமான், மக்களை அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், கபிலமகரிஷியின் தோஷ நிவர்த்திக்காக இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியதாகக் கூறி, கபிலருக்கு முக்தி அளித்து மறைந்தார்.

இங்கு நடந்த காட்சியை அரசனிடம் தெரிவிப்பதற்காக மக்கள் கூட்டமாகச் சென்றனர். ஆனால், அன்று இரவு சுந்தர சோழரின், கனவிலும் இக்காட்சி தோன்ற, மாடம்பாக்கம் விரைந்த அரசர் சுயம்பு லிங்க மூர்த்திக்குக் கோயிலைக் கட்டினார். மூலவரின் பெயரில் உள்ள 'தேனு' என்பது பசுவை குறிக்கிறது.

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர்

இத்திருத்தலத்தின் கட்டடக்கலை சிறப்புடன் திகழ்கிறது. மூலவரான சுயம்பு லிங்க, தேனுபுரீஸ்வரின் கர்ப்பக்கிரகமானது, தூங்கும் யானையின் பின்புறம் போல (கஜபிருஷ்டம்) மாடமாக அமைக்கப்பட்டுள்ளது‌. கோயிலின் அர்த்தமண்டபம் மற்றும் 18 தூண்கள் உடைய முன் மண்டபம் அழகான, சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. முன் மண்டபத்தின் தூண்களில் கணபதி, துவார பாலகர்கள், வீணாதட்சிணா மூர்த்தி, கங்கா விசர்ஜனர், ஊர்த்துவ தாண்டேஸ்வர், சங்கர நாராயணன், வீரபத்திரஸ்வாமி, பத்திரகாளி, கஜசம்ஹர மூர்த்தி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரிவர், நரசிம்மர், பஞ்சமுக லிங்கேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், ஸ்வரஹரேஸ்வரர், ராமர் பட்டாபிசேகம், நால்வர் மூர்த்திகள், இசைக்கும் கிருஷ்ணர், ஆஞ்சிநேயர் எனப் பல தெய்வத் திருவுருவச் சிற்பங்கள் உள்ளன.

மாடம்பாக்கம் சரபேஸ்வரர்

இங்கு மண்டபத்தூணில் சரபேஸ்வரர் காட்சியளிக்கிறார். இவரை வணங்குவதால் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீயசக்திகளிடமிருந்து விமோஷனம் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமணம் கைக்கூடும். குழந்தைவரம் வேண்டுபவர்களுக்கு, குழந்தைச்செல்வம் பெறலாம். பயம், மனரீதியான பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆத்மஷாந்தி, மனநிம்மதி கிடைக்கும் என்கிறார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் திருப்புகழில், 'தோடுறுங் குழையாலே' என்ற பதிகத்தில், இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு. வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீ சுப்புரமணிய முருகப்பெருமான் குறித்துப் பாடியுள்ளார்.

இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் சுயம்பு லிங்க, தேனுபுரீஸ்வரரை வணங்குவதால், முன்பிறவிப் பாவத்திலிருத்து விடுபட்டு முக்தி அடையலாம். இவரை வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும், மனதில் மனநிம்மதி ஏற்படும். இந்த சிவபெருமானுக்கு வில்வத்தால் பூஜை செய்தால் எண்ணியது ஈடேறும். திருக்கல்யாணம் செய்து வேண்டிக்கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும்.

தேனுபுரீஸ்வரர்

இந்தக் கோயில், இந்தியத் தொல்லியல் துறையால், பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகிலேயே உள்ள இந்த சோழர்களின் கலைக்களஞ்சியத்தை வாய்ப்பு உள்ளவர்கள் கண்டு மகிழ்வதோடு தேனுபுரீஸ்வரரை வழிபட்டு சகல வரங்களையும் பெறலாம்.



from Latest news https://ift.tt/BPfLWgn

Post a Comment

0 Comments