புதுச்சேரியில் உள்ள மிகப் பழமையான கோயில்களில் பாரதி வீதியிலுள்ள காமாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. ரெயின்போ நகரில் இந்தக் கோயிலுக்கு சொந்தமாக 64,035 சதுர அடி நிலம் இருக்கிறது. சுமார் ரூ.12.5 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை கோயில் அறங்காவல் குழுவினர் கடந்த ஆண்டு பார்வையிட்டனர். அப்போது அந்த இடத்தை போலி பத்திரம் மூலம் மர்ம நபர்கள் சிலர் வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அதையடுத்து கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்டுத் தருவதுடன், போலி பத்திரம் மூலம் அதை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோயில் அறங்காவல் குழு நிர்வாகி சுப்பிரமணியன் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ.டி போலீஸ், எஸ்.பி மோகன்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தது.
அந்த குழு விசாரணையில் இறங்கியதுடன், சென்னையைச் சேர்ந்த ரத்தினவேல், அவரின் மனைவி மோகனசுந்தரி, மனோகரன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னராசு (எ) பழனி, பெரியநாயகிசாமி, அவரது மகன் ஆரோக்கியதாஸ் (எ)அன்பு, ஆரோக்கிய ராஜ் பிரான்சுவா, முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன், சகாயராஜ், கருணாகரன், மற்றொரு மணிகண்டன் ஆகிய 12 பேரை கைது செய்தது. இந்நிலையில் போலி உயிலின் அடிப்படையில் கோயில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக அப்போதைய உழவர்கரை சார்பதிவாளரும், தற்போது வில்லியனூர் சார் பதிவாளருமான சிவசாமி என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
சார் பதிவாளர் சிக்கியது எப்படி?
கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு கடந்த 1995-ம் ஆண்டில் எழுதப்பட்டது போல போலியான உயிலை தயாரித்து, அதன்மூலம் கடந்த 2021-ம் ஆண்டு இடத்தை கிரயம் செய்திருக்கின்றனர். ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த தென்னாற்காடு மாவட்டம் கடந்த 1993-ம் ஆண்டு விழுப்புரம் ராமசாமி படையாட்சி மாவட்டம், கடலூர் வள்ளலார் மாவட்டம் என இரண்டாக பிரிக்கபப்ட்டது. அதையடுத்து 1997-ம் ஆண்டுதான் இரண்டு மாவட்டங்களும் கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் என பெயர் மாற்றம் பெற்றன.
அதேபோல யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி கடந்த 2006-ம் ஆண்டுதான் புதுச்சேரி பெயர் மாற்றம் பெற்றது. ஆனால் 1995-ம் ஆண்டில் எழுதப்பட்டதாக சொல்லப்பட்ட உயிலில் புதுச்சேரி என்றும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் என்றும் எழுதி பத்திரத்தை பதிவு செய்திருக்கின்றனர். இதில்தான் சார் பதிவாளர் சிக்கியிருக்கிறார். தொடர்ந்து ஊழல் புகாரில் சிக்கி வந்த சார் பதிவாளர் சிவசாமிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்து சார் பதிவாளராகவே கோலோச்சி வந்த இந்த சிவசாமிதான் தற்போது கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருக்கிறார்.
from Latest news https://ift.tt/VyueQOc
0 Comments