அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்து மாவட்ட போராட்டங்களிலும் செந்தில் பாலாஜி விவகாரமே பிரதானமாக பேசப்பட்டது. ஆனால், அதிமுக சார்பில் நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்ட பேனரில் செந்தில் பாலாஜி-யை பதவி நீக்கம் செய்வது குறித்த எந்த வாசகமும் இடம்பெறவில்லை. `சானலை தூர்வாராமல் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் இருப்பதை கண்டித்தும், மின்சார கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், தடிக்காரங்கோணத்தில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டுவதை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் குளம் வாருதல் முறைகேடு, சாலைப்பணிகள் முறைகேடு, டாஸ்மாக் முறைகேடுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்’என ஆர்ப்பாட்ட மேடை பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க சார்பாக தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. உள்ளூர் மாவட்ட பிரச்னையாக விவசாய பிரச்னையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
விவசாயிகள் பிரச்னையை கலெக்டரிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை. பேச்சிப்பாறை அணை கடந்த 1-ம் தேதி திறக்கப்பட்டது. திறந்து அரை மணி நேரத்தில் அடைக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் 40 அடிக்கு மேல் இருந்தால் ராதாபுரத்துக்கு தண்ணீர் கொடுக்கலாம். ஆனால் 38 அடி இருப்பு இருக்கும்போது ராதாபுரத்துக்கு தண்ணீர் கொடுக்கிறார்கள். உள்ளூர் அமைச்சர் மனோ தங்கராஜ் அதை கண்டுகொள்ளவில்லை. விவசாயிகள் பிரச்னையை முதல் கோரிக்கையாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் மோசமாக இருப்பதை செப்பனிட வேண்டும் என்பதை இரண்டாவது கோரிக்கையாகவும். மூன்றாவது கோரிக்கையாக செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
கன்னியாகுமரி மாவட்ட பிரச்னை சம்பந்தமாக உள்ளூர் அமைச்சரும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி ஏற்றம் விண்ணை தொட்டுவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் செய்த குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி பதவி இழந்தார். ஆனால், அவருக்கு தி.மு.க அமைச்சர் பதவி கொடுத்துள்ளது" என்றார்.
from Latest news https://ift.tt/RzMckOI
0 Comments