மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு மத்தியில் வெடித்த வன்முறை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் சென்றுவந்த பிறகும் வன்முறை கலவரங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், நேற்று பரத்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ,"நாட்டின் நிலைமை மோசமடைந்து வருகிறது. மணிப்பூரில் கலவரம் தொடங்கிய போது பா.ஜ.க கர்நாடகாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. துரதிர்ஷ்டவசமாக, இப்போதுவரை மணிப்பூர் கலவரத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஆனால். பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெறுவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்குப் பிறகு, மக்களின் மனநிலை மாறியிருக்கிறது என்பதே தற்போதைய செய்தி. பா.ஜ.க மதத்தின் பெயரால் மட்டுமே அரசியல் செய்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு (ERCP) தேசிய திட்ட அந்தஸ்து வழங்குவதாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர். பாட்னாவில் எதிர்கட்சிகளின் கூட்டம் ஒரு நல்ல தொடக்கம். இது அரசியலில் சாதகமான அறிகுறிகளாக தெரிகிறது" எனக் கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ் தேவ்னானி, "அசோக் கெலாட் விரக்தியடைந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார். வகுப்புவாதப் பதற்றத்தை உருவாக்குவது காங்கிரஸ்தான், அதை பா.ஜ.க தீர்த்து வைக்கிறது. காங்கிரஸின் கொள்கைகளால் ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. இப்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் தொடர் தோல்விகளை மறைக்க இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from Latest news https://ift.tt/uC7n6DI
0 Comments