மஞசல: தழலளரகளன மகபபற கல சரமம; எஸடட கபபகம|1349/2 எனம நன|பகத-17

ஆறு வயது குழந்தையை முதல்நாள் பள்ளியில் விட்டுவிட்டு வருகையில், குழந்தை அழுகிறதோ இல்லையோ, பெற்றோருக்கு தொண்டை அடைத்துக்கொண்டு வருகிறது.

பிறந்து 43 நாட்களேயான கைக்குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு தேயிலைக்காட்டுக்கு வேலைக்குச் செல்லவேண்டிய நிர்பந்தத்தில் வாழ்ந்த தாயின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? எண்ணிப் பார்க்கவியலா துயரமது. “குழந்தை பராமரிப்புக்கு விடுப்பு” வழங்கிடவேண்டி விவாதம் நடந்துவருகிற காலத்தில், அரசு அதிகாரிகள் எளிதில் எட்டிப்பார்த்திடாத எஸ்டேட் மக்களின் வாழ்நிலை முற்றிலும் வேறுபட்டது.

மாஞ்சோலை எஸ்டேட்

கரு உருவான முதல் நாளிலிருந்து, குழந்தை பிறக்கும் முன்பான 42 நாட்களுக்கு முந்தைய நாள் வரையிலும், கர்ப்பிணிப் பெண்கள் வேலைக்காக கரடுமுரடான, ஒழுங்கற்ற, ஏற்ற இறக்கமான, ஒற்றையடிப் பாதையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள காடுகளுக்கும் நடந்துபோக வேண்டிய நிர்பந்தம் நிலவியது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், குறைந்தபட்ச பாதுகாப்பும், கழிப்பறை வசதிகூட இல்லாத காடுகளில் வேலை என்பதை இன்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

மகப்பேறு காலத்தில் சலுகைகள் பல நடைமுறையில் இருந்தாலும், அவைகளை அனுபவிக்க அவ்வப்போதைய எஸ்டேட் மேலாளர் / காட்டு அதிகாரிகளின் கரிசனம் தேவையாக இருந்தது. பெரும்பாலும் இதர தொழிலாளர்கள் என்ன வேலை செய்கிறார்களோ அதையே கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் செய்யவேண்டும். இதுபோன்ற கெடுபிடிகளால், அழும் குழந்தைக்கு உரிய இடைவெளியில் பால்கொடுக்க மறைமுகமாக அனுமதி மறுக்கப்பட்டது. பால்குடி மறவா குழந்தையை கவனத்தில் கொள்ளாமல், பத்து மாதத்திற்கு முன்னரே அந்த தாய்மார்களுக்கு, இதர பெண் தொழிலாளர்களைப் போலவே வேலை செய்யவேண்டிய நிர்பந்தமும் நிலவியது.

மாஞ்சோலை எஸ்டேட்

1970களுக்கு முன்பு வரையிலும் ஒரு வீட்டிற்கு 8 முதல் 10 பிள்ளைக்கு குறையாது இருக்கும். அப்போது அது வெகு சாதாரணம். குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டி மகப்பேறு முடிந்த பெண் தொழிலாளர்களும், அவர்களை பராமரிக்க வேண்டி அவ்வப்போது அவர்களின் தாயார் / கணவன் போன்றோரும் வேலைக்குப் போகாமல் உடனிருந்தனர். எஸ்டேட்டில் வேலைக்குப் போகாமல் இருப்பது அந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு மட்டும் தனிப்பட்ட இழப்பு அல்ல. மாறாக, பல பெண்களின் தொடர்ச்சியான வருகையின்மையை மொத்தமாக எதிர்கொண்ட கம்பெனி அதனை பேரிழப்பாகக் கருதியது.

குறிப்பிட எண்ணிக்கையினர் வேலைக்கு வராததன் காரணமாக ஏற்படும் இழப்பினை சரிகட்டும் விதமாகவும், 1951ஆம் ஆண்டின் தோட்டத்தொழிலாளர் சட்டத்தில் உள்ள “குழந்தைகள் காப்பகம்”(Crèches) உருவாக்கிட வேண்டுமென்ற சரத்தை நடைமுறைப்படுத்தும் விதமாகவும், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என எல்லா எஸ்டேட் பகுதிகளிலும் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கியது கம்பெனி. அந்த வளாகத்துக்குள் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் இருந்தன. தாங்கள் குடியிருக்கும் லயன் வீடுகளை “பாடி” என்று அழைக்கும் எஸ்டேட் மக்கள், தங்கள் பிள்ளைகள் பகல்பொழுதுகளை செலவிடும் பாலவாடியை “பிள்ளைப்பாடி” என்று சொல்லுவார்கள்.

மாஞ்சோலை எஸ்டேட்

பிரசவம் முடிந்த தாய்மார்கள் தங்களைப் பராமரிப்பதுடன், குழந்தையையும் பராமரிக்க வேண்டும். எஸ்டேட்டில் வேலைபார்த்துக்கொண்டே குழந்தை வளர்ப்பது பெரும் சவாலான காரியம். தீராத பணிச்சுமையின் காரணமாய், எவராலும் தன் குழந்தையுடன் போதிய நேரம் செலவிட இயலாது. குடும்பச்சூழல் கருதி, ஒருநாள் விடுமுறை எடுக்கவே தயங்கும் தொழிலாளர்களுக்கு, வேலைக்கே போகாமல் நின்றுவிடுவோம் என்ற எண்ணம் எழுந்துவிடவா போகிறது?. இதனால் பிள்ளைப்பாடியை, தங்களுக்கு கம்பெனி கொடுத்த வரமாகவே கருதினர் “குழந்தைகள் காப்பகம்” கொண்டுவந்த பின்னணி தெரியாத வெள்ளந்தியான தொழிலாளர்கள்.

நிரந்தரப் பணியாளர்களாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறுக்கு முன்னதாக 42 நாட்களும், குழந்தை பெற்றபிறகு 42 நாட்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுத்தது கம்பெனி. அந்த சமயத்தில் அவர்களின் உதவிக்காய் தாயார் / கணவன் உடனிருக்க விரும்பினால், ஊதியமின்றி இருக்க வேண்டியதுதான். தவழவே ஆரம்பித்திருக்காத, குழந்தை பிறந்த 43ஆம் நாளிலிருந்து ஐந்து வயது நிரம்பும் வரையிலும், பகல் பொழுதில் பிள்ளைப்பாடியில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லவேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தார்கள் பெற்றோர்கள். தாயின் உடல் சூட்டினை முழுமையாக உணரும் முன்னே பகலில் தனித்து விடப்பட்டனர் பிஞ்சுக் குழந்தைகள்.

மாஞ்சோலை எஸ்டேட்

எஸ்டேட்டில் வேறுவழியில்லை. காலையில் 7.30க்கு தேயிலைக்காட்டில் வேலைக்கு இருக்கவேண்டும். அதனால் காலையில் 7 - 7.10க்குள் குழந்தைகளை பிள்ளைப்பாடியில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வார்கள். அடுத்த 4 மணிநேரத்துக்கு குழந்தையைப் பார்க்கமுடியாது. மகப்பேறான தாய்மார்களுக்கு மட்டும் அரை மணிநேரம் வரை தாமதமாக காட்டுக்கு வந்துகொள்ள சிறப்பு அனுமதி இருந்தது.

பிள்ளைப்பாடியில் இருக்கும் குழந்தைகளுக்கு கம்பெனி செலவில் தினமும் பால், பாசிப்பயறு, காய்கறிகள் போட்ட குழம்பு, சோறு வழங்கப்படும். அங்கு கல்வி கற்பித்தலோ, மழலையர் பாடலோ எதுவும் இருக்காது. அழுகை, குழந்தைகள் தானாக விளையாடிக் கொள்வது, சாப்பாடு, தூக்கம் இதுதான் 5 வயது வரைக்குமான அன்றாட நடைமுறை. 1980களின் தொடக்கத்தில், 5 வயது வரை நான் வளர்ந்த நாலுமுக்கு பிள்ளைப்பாடியில், ஒரேசமயத்தில் 50 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பர். எங்களைப் பார்த்துக்கொள்ள வயதில் மூத்த மூன்றே பெண் பராமரிப்பாளர்கள்.

மாஞ்சோலை எஸ்டேட்

இந்தக் குழந்தை–பராமரிப்பாளர் விகிதமானது, எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் சரியானதாக இருக்கமுடியாது. குழந்தைகளையும், காப்பகத்தையும் சுத்தம் செய்வதற்கு வேறு பணியாளர்கள் கிடையாது. இவர்களே அப்பணியையும் செய்யவேண்டும். அவர்களுடன் சேர்ந்து அங்கிருக்கும் 5 வயது குழந்தைகளும் தங்களைவிட வயதில் குறைந்த குழந்தைகளை கவனித்துக்கொள்ள பழக்கப்படுத்தப்படுவார்கள். உணவு சமைக்க ஒருத்தரும் அவருக்கு ஓர் உதவியாளரும் மட்டும் தனியே இருந்தனர்.

மாலையில் எல்லா குழந்தைகளும் வீட்டுக்குப்போன பின்னர் காப்பகத்தைக் கழுவி சுத்தம்செய்த பின்னரே செல்வார்கள். அதனைப் பராமரிக்கும் பாட்டிமார்கள். இவையனைத்தையும் தாண்டி, எஸ்டேட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் என்பதாலும், எல்லா பெற்றோர்களையும் தெரியும் என்பதாலும், தங்களுக்கான வேலையாகக் கருதாமல், குழந்தைகளை மிகுந்த ஈடுபாட்டுடன், அக்கறையுடன் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். விழித்திருக்கும்போது பெரும்பாலான நேரம் காப்பகத்தில் இவர்களின் அரவணைப்பில் இருப்பதால் வெளியூரில் இருக்கும் / வேலைநிமித்தம் காட்டிற்குச் செல்லும் சொந்த ஆச்சியைவிட அங்கிருந்த பராமரிப்பாளர்களே எங்களுக்கு பாட்டிகளாய், நெருங்கிய சொந்தங்களாகிப் போனார்கள். அந்த உணர்வே, பிள்ளைப்பாடியிலிருந்து வெளியே வந்து கால்நூற்றாண்டு கடந்த பிறகும், அம்பையில் வாழ்ந்து வந்த என்னைப் பராமரித்தவர்களில் ஒருவரான இராஜம்மாள் பாட்டியை 2008ல் பெற்றோருடன் சென்று சந்திக்க உந்துதலாக இருந்தது.

இராஜம்மாள் பாட்டி

தொழிலாளர்களுக்கு மாலை 4 மணிக்கு வேலைமுடியும். ஆனால் பாலூட்டும் தாய்மார்கள் மட்டும் மாலை 3 மணிக்கு காட்டிலிருந்து கிளம்பி, காப்பகத்திற்குச் சென்று தங்கள் குழந்தைகளை வீட்டிற்குக் கொண்டுசெல்வார்கள். தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த ஏனைய அனைத்து நாட்களிலும் இதுதான் நடைமுறை.

“தாமிரபரணி படுகொலை”யில் முடிந்த, தமிழகத்தை திரும்பிப் பார்க்கச்செய்த கூலி உயர்வு போராட்டத்திற்கு 1998ஆம் ஆண்டு அறைகூவல் விடுத்த புதிய தமிழகம் கட்சி, 33 கோரிக்கைகளை முன்வைத்தது. அதில், “# 8 மாத கர்ப்பிணியை பல கிலோமீட்டர் தூரம் நடக்க கட்டாயப்படுத்தக் கூடாது, # அழுத பிள்ளைக்கு பால்கொடுக்க அனுமதி மறுக்கக்கூடாது, # பிரசவமான 43ஆவது நாளில் வெகு தொலைவில் உள்ள காட்டிற்குச் சென்று வேலைசெய்ய துன்புறுத்தக் கூடாது, # பத்து மாதத்திற்கு முன்பாகவே குழந்தைக்கு பால்கொடுப்பதை நிறுத்தச் சொல்லக்கூடாது” உள்ளிட்ட கோரிக்கைகளும் இடம்பெற்றிருந்தன.

1998-1999ல் நடந்த பெரும் போராட்டத்தின் விளைவாய், மகப்பேறு கண்ட தொழிலாளிகளுக்கு பெரும்பாலும் பாலவாடி/ குயிருப்புக்குப் பக்கத்திலுள்ள தேயிலைக்காடுகளில் தனியாக வேலை ஒதுக்க ஆரம்பித்தது கம்பெனி. அதனை “பிள்ளைக்காரிகள் காடு” என்று அடையாளம் சொல்லும் அளவுக்கு அந்த தனிக்காடு நீண்ட காலம் தொடர்ந்தது. இதர தொழிலாளிகள் வழக்கமாகப் பறிக்கும் எடை அளவுக்கு அவர்கள் தேயிலை பறித்திடவும் நிர்பந்திக்கப்படவில்லை.

பால் குடிக்கும் குழந்தை இருந்தால், வழக்கமான 12 மணிக்குப் பதிலாக 11.30 மணிக்கே வந்து பால் கொடுத்துவிட்டு, சாயங்காலம் 4 மணிக்குப் பதிலாக அரைமணி நேரம் முன்னதாக, 3.30மணிக்கே குழந்தைகளை வீட்டுக்கு எடுத்துச்செல்ல தொழிலாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள். குழந்தை பிறந்து சுமார் ஒரு ஆண்டுகாலம் வரையிலும் அந்த சலுகையை அவர்கள் அனுபவித்துக் கொள்ளலாம்.

மாஞ்சோலை எஸ்டேட்

போராட்டத்திற்கு முன்பு வரையிலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, 2000க்குப் பின்னர் தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதேபோல பல்வேறு தளர்வுகளை செய்யவேண்டிய அளவுக்கு நிர்பந்தம் கம்பெனிக்கு ஏற்பட்டது. இதற்கிடையில் அரசின் அங்கன்வாடி திட்டம் எஸ்டேட் பகுதியில் அமலுக்கு வந்தது. அதன்வாயிலாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காய் ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டதுடன், குழந்தைகளின் உடல்நலனும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

1998 வரையிலும் குழந்தைகளைப் பராமரிக்க, சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளபடி சிறப்பு பயிற்சி எதுவும் பெறாத, வயது மூத்த பெண் தொழிலாளர்களை குழந்தை காப்பகங்களில் வேலைக்கு அமர்த்திய கம்பெனி, 2000க்குப் பின்னர் சில பயிற்சிகளை அளித்து திறன்படைத்த (Skilled) பணியாளர்கள் என அவர்களை வகைப்படுத்தியது. அந்த பயிற்சிகள் அரசுக்குக் கணக்கு காட்டவேண்டி பெயரளவுக்கு நடத்தப்பட்ட கண்துடைப்பே என்பதை தொழிலாளர்கள் நன்கறிவர்.

மாஞ்சோலை எஸ்டேட்

2000க்கு முன்பு வரையிலும் எஸ்டேட்டில் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், பிள்ளைப்பாடி எப்பொழுதுமே குழந்தைகளால் நிரம்பி வழியும். தற்போது தேயிலைக்காட்டில் வேலைபார்க்கவே ஆளில்லை. அதனால் குழந்தைகளின் எண்ணிக்கையும் அருகி, தற்போது எஸ்டேட் பகுதிகளில் குழந்தைகள் காப்பகமே இல்லாமல் போய்விட்டது.

படங்கள் - மாஞ்சோலை செல்வகுமார், இராபர்ட் சந்திர குமார்



from Latest news https://ift.tt/crbIOWk

Post a Comment

0 Comments