திருமலை திருப்பதியில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். வேங்கடவன் அர்ச்சாவதார மூர்த்தமாக திருமலையில் எழுந்தருளியபோது பிரம்மன் முதலில் நடத்திய உற்சவமே பிரம்மோற்சவம்.
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விதமாக அந்த உற்சவத்தை ஆண்டுதோறும் நடத்த ரிஷிகளும் முனிவர்களும் சங்கல்பித்துக்கொண்டனர். அதைப் பிற்காலத்தில் மன்னர்களும் ஆசார்யர்களும் பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்தனர்.
பிரம்மோற்சவத்தின்போது உற்சவர் மலையப்பசுவாமி பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி அருள்பாலிப்பார். இதைக் காண திருமலையில் தேவர்களும் திரள்வார்கள் என்பது ஐதிகம். உற்சவ நாள்களில் தினமும் லட்சக்கணக்கானோர் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நாள்களில் திருமலை மலர் அலங்காரங்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தேவலோகம்போல் காட்சி கொடுக்கும். பெருமாள், ஆடிப்பாடி வரவேற்கும் பக்தர்கள் கூட்டத்தின் நடுவே நகர்ந்துவரும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்.
பெரும்பாலும் பிரம்மோற்சவம், பெருமாள் அவதாரம் செய்ததாக நம்பப்படும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும். இது தவிர்த்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நவராத்திரி பிரம்மோற்சவமும் கொண்டாடப்படும். திருமலையின் திருவிழாக்கள் எல்லாம் சந்திரமானம் எனப்படும் சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகின்றன. சந்திர நாட்காட்டியில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அதிகமாதம் என்னும் மாதம் வரும். ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும் மாதமே அதிகமாதம் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு அமையும் மாதம் முழுவதும் வழிபாட்டுக்கு உரியது.
எனவே திருமலையில் வழக்கமான புரட்டாசி பிரம்மோற்சவத்தோடு நவராத்திரி ஒன்பது நாள்களும் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அப்படி இரண்டு பிரம்மோற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன.
இரண்டு பிரம்மோற்சவ நாள்களிலும் பெருமாள் பல்வேறு வாகன சேவையில் எழுந்தருளி வீதி உலா வருவார். ரதோற்சவமும் நடைபெறும். இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றம் கிடையாது. எனவே கொடி இறக்கமும் இல்லை. மற்றபடி அனைத்து சேவைகளும் நடைபெறும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 - ம் தேதி முதல் 26 -ம் தேதி வரை சலகட்லா எனப்படும் புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெற இருக்கிறது. இந்த பிரம்மோற்சவத்தில், 18-ம் தேதி கொடியேற்றமும், 22- ம் தேதி கருடவாகனமும், 23 -ம் தேதி தங்கரத சேவையும், 25 -ம் தேதி ரதோற்சவமும் நடைபெற உள்ளன.
அதேபோன்று நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 15 - ம் தேதி தொடங்கி 23 - ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் 19 - ம் தேதி கருட சேவையும், 22 -ம் தேதி சுவர்ண ரதமும், 23 -ம் தேதி தீர்த்த வாரியும் நடைபெறும்.
எனவே இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் திருமலை திருப்பதி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்டத்தை சமாளிக்கவும் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யும் வகையிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறும் நாள்களில் நிகழ நடைபெற வேண்டிய ஆர்ஜித சேவை, திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகியவற்றைத் தடை செய்துள்ளது. இதன்மூலம் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யமுடியும் என்கிறார்கள் தேவஸ்தான அதிகாரிகள். எனவே பக்தர்கள் இதை மனதில் கொண்டு தங்கள் திருப்பதிப் பயணத்தை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
திருப்பதி பக்தர்களுக்குக் கோலாகலமான மாதங்களாக வரும் மாதங்கள் அமையப்போகின்றன என்றால் சந்தேகமே இல்லை.
from Latest news https://ift.tt/mV6DEHC
0 Comments