உயர்கல்வி பாடத்திட்ட விவகாரம்: அரசுடன் அடுத்த மோதலுக்கு ஆயத்தமான ஆளுநர் ரவி?!

தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கோவை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்க தலைவர் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்தில், ``தமிழக உயர்கல்விமன்றம் தயாரித்துள்ள பொதுப் பாடத்திட்டத்தை, அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என, தமிழக உயர்கல்வித்துறை அழுத்தம் கொடுப்பதாக, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருப்பதோடு, ``பொதுப்பாடத்திட்டம், தற்போது கல்லுாரிகள் பின்பற்றும் பாடத்திட்டத்தை விட பின்தங்கிய நிலையிலும், தரமான கல்வியில் சமரசம் செய்து கொள்வதாகவும் உள்ளது” என கவலை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

மேலும், ``உயர்கல்வியானது, மத்திய அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி.,யிடம், ஆளுநர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் பெறப்பட்டது. இதற்கு, யு.ஜி.சி., தெளிவான விளக்கம் அளித்துள்ளது. ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகள், யு.ஜி.சி. விதிகளை பின்பற்றி, தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கவும், உரிய காலத்தில் புதுப்பிக்கவும் செய்யலாம்’ என கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுப்பாடத் திட்டம் குறித்து, எந்த சந்தேகமோ, குழப்பமோ இல்லாமல், பல்கலக்கழகங்களும், தன்னாட்சி கல்லூரிகளும், நீங்களே உரிய சட்ட அமைப்புகளின் வழியே, பாடத்திட்டத்தை வடிவமைத்து பின்பற்றலாம். தமிழக உயர்கல்வி மன்றம் தயாரித்துள்ள பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்துடன், ஆளுநர் ரவிக்கு யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ்குமார் எழுதியுள்ள கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கல்வி செயற்பாட்டாளர் பேராசிரியர் வீ.அரசு, “தமிழக அரசு அவர்களது உயர் கல்வி நிறுவனம் மூலமாக முறைப்படி தயாரித்த பொது பாட திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அதை தீர்மானிக்க வேண்டியது தமிழக அரசுதானே தவிர, இதில் ஆளுநருக்கு என்ன தொடர்பு இருக்கிறது. இது ரொம்ப அராஜகமான செயல். பொது பாடத்திட்டத்தை ஏற்று கொள்ளவில்லை, தவறு என்று சொல்வது வேறு விஷயம். ஆனால், எந்த ஒரு பங்களிப்பும் இல்லாமல் இப்படி சொல்வதெல்லாம் தவறுதான். தமிழக அரசா, தனிப்பட்ட ஆளுநரா என்று பார்க்கும் போது ஆளுநரின் இந்த நடவடிக்கை ஒரு மோசமான அணுகுமுறையாக இருக்கிறது” என்றார்.

வீ.அரசு

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, “உயர்கல்வி அமைச்சரே, ‘இது யாருக்கும் கட்டாயம் கிடையாது. பரிந்துரைதான்’ என்று சொல்லிவிட்டார். பின் ஏன் ஆளுநர் சொல்ல வேண்டும். ஆளுநர் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார். இந்த விஷயத்தில் ஆளுநரின் கருத்தை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு நேர் எதிராக செயல்படக் கூடிய நபர் அவர். ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கையிலும் இது போன்ற ஒரு கருத்தை சொல்வாரா அவர். இதில் சிக்கல் இருக்கிறதா... இல்லையா... என்பதுதான் பிரச்னையே தவிர ஆளுநரின் கருத்து அவசியமற்றது. சட்டப்படி செயல்படாத ஆளுநர் எங்கெல்லாம் மாநில அரசுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கண்ணை திறந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஆளுநரின் கண்ணாடி மூலமாக இந்த விஷயத்தை பார்க்க முடியாது” என்றவர், தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தையும் விமர்சிக்கிறார்.

``தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகம் உருவக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான பணி பாடத்திட்டத்தை உருவாக்குவது. 13 பல்கலைக்கழகத்துக்கும் சேர்த்து ஒரு பாடத்திட்டத்தை கொடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். அப்போது பல்கலைக்கழகத்துக்கு என்ன வேலை. ஒரு பல்கலைக்கழகத்துக்கு கீழ் நுற்றுக்கணக்கான கல்லூரிகள் இருக்கின்றன. அதில் ஆயிரக்கணக்கான ஆயிரியர்கள் பணியாற்றுகிறார்கள். ஒரு பாடத்தில் உள்ள நிபுணத்துவத்தை வைத்துத்தான் அவர்கள் பாடத்திட்டத்தை உருவாக்குகிறார்கள். அதற்காகத்தான் இயற்பியலா இந்த பல்கலைக்கழகம், தமிழா இந்த பல்கலைக்கழகம் என்று அதன் சிறப்பறிந்து மாணவர்கள் செல்கிறார்கள்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

பாடத்திட்டத்தை பொதுவாக உருவாக்க, ‘ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மாதிரி பாடத்திட்டம் இருந்தால், உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் எப்படி மதிப்பிடுவது’ என்கிற காரணத்தை முன்வைக்கிறார்கள். எழுபத்தைந்து ஆண்டுகளாக இல்லாத பிரச்னை இப்போது திடீரென்று எங்கிருந்து வந்தது. ‘வெளிப்பாட்டின் அடிப்படை முறையிலான கற்றல் முறை’(A method of learning based on expression) என்பதன் அடிப்படையில், பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டுதலில் இந்த பொது பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த முறை உலகின் சில நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழு வெற்றி என்று யாராலும் நிருபிக்க முடியவில்லை” என்கிறார்.



from Latest news https://ift.tt/ynwNrv4

Post a Comment

0 Comments