கடந்த 30 அத்தியாயங்களாக மினிமலிச வாழ்வியல் முறையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் இரு அத்தியாயங்களில் இந்த அலசலை நிறைவுசெய்து, நிஜமாகவே மினிமலிச வாழ்வியலில் களமாடப் போகிறோம். அதற்கு முன் இது உண்மையிலேயே பலன் தருமா என்று உறுதிசெய்து கொள்ள விரும்புவது இயல்புதானே? அதனால் இதை நிரூபிக்கும் ஆதாரங்களைத் தொடர்ந்து அறிவோம், வாருங்கள்!
மன அழுத்தத்தைக் குறைப்பதில் தொடங்கி நேரம், சுதந்திரம் மற்றும் திருப்தியை அதிகரிப்பது வரை, மினிமலிசத்தின் நிரூபிக்கப்பட்ட 15 முக்கிய நன்மைகளின் இரண்டாவது பகுதி இதோ...
8. மேலும் இலவச இடம்!
இந்திய நடுத்தர வர்க்க குடும்பங்கள் பற்றிய மினிமலிச ஆய்வில், வீடுகளின் வரவேற்பறை தொடங்கி பால்கனி வரை அத்தனை இடங்களிலும் மிக அதிகமான பொருள்கள் நிரம்பியிருப்பதை அறிய முடிந்தது. இதுபோன்ற சூழலை மாற்றி அமைப்பதன் மூலம், உங்கள் வீட்டில் பயன்படுத்துவதற்கும் அனுபவிப்பதற்கும் அதிக அளவு இடத்தை இலவசமாகவே பெற முடியும். சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியும்தானே?
9. குறைவான சுற்றுச்சூழல் பாதிப்பு
நாள்தோறும் இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன. நுகர்வோர் மாசுபாடோ அதிகமாகி வருகிறது. இந்த முரண் பூமிக்கு அழிவை ஏற்படுத்துவதோடு, காலநிலை மாற்றச் சிக்கல்களையும் அதிகரிக்கிறது. உலகளாவிய கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தில் 60 சதவிகிதத்துக்கு வீட்டுப் பொருள்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, பயன்பாடு காரணமாக இருப்பதாக 2015ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மினிமலிசம் இந்த ஒழுங்கீனத்தைக் குறைப்பதுடன், அன்றாட நுகர்வுத் தன்மையைக் குறைப்பதையும் ஊக்கப்படுத்துகிறது. குறைவான புதிய பொருள்களை வாங்குவதன் மூலமும், நமக்குச் சொந்தமான பொருள்களை மறுசுழற்சி செய்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் பழுதுபார்ப்பதன் மூலமும், இயற்கை வளங்கள் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கலாம். அதனால் குறைவான கழிவு மற்றும் மாசுபாட்டை உருவாக்கலாம்.
10. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள்
மினிமலிசம் நீங்கள் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அதோடு, குறைந்தபட்ச வீட்டைப் பராமரிப்பதற்கு நேரமும் குறைவாகவே செலவாகும். அதனால் ஆரோக்கியமான உணவுகளைச் சமைத்து ருசிக்க வாய்ப்புகள் உருவாகும்.
ஓர் ஆய்வில், ஒரு நேர்த்தியான அறையில் பங்கேற்பாளர்கள் ஆரோக்கியமான தின்பண்டங்களைத் தேர்ந்தெடுத்தனர்; அதே நேரத்தில் குழப்பமான இடத்தில் இருப்பவர்கள் ஆப்பிள்களைவிட சாக்லேட் பார்களைத் தேர்ந்தெடுப்பது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
11. சிறந்த தூக்கம்
தனிப்பட்ட இடங்கள் என்பதால், படுக்கையறைகள் பெரும்பாலும் வீட்டில் மிகவும் அதிக பொருள்கள் உள்ள நெருக்கடியான அறைகளில் ஒன்றாகவே விளங்குகிறது. உதாரணமாக, 27 சதவிகித அமெரிக்கர்கள் தங்களுடைய படுக்கையறையை பொருள்களின் சேமிப்புக்காகப் பயன்படுத்துகின்றனர்.
மிகவும் நெருக்கடியான படுக்கையறை உங்கள் தூக்கத்தையும் குழப்பிவிடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. தூக்க கோளாறுகள் நம் நல்வாழ்வைக் குலைக்கக்கூடியவை.
படுக்கையறை ஒழுங்கீனம் இருப்பவர்களுக்கு தூக்கக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தூக்கம் தொடர்பான பிரச்னைகளைக் குறைத்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த படுக்கையறையை ஒழுங்கு செய்யுங்கள்.
12. வாழ்க்கை முழுக்க தேடலா?
நம்மில் பலர் ஒவ்வொரு நாளும் தோராயமாக 5-20 நிமிடங்கள் தவறான விஷயங்களைத் தேடுகிறோம் (இணையத்திலும்தான்!). இப்போது இது அதிக நேரமாகத் தெரியவில்லைதான். ஆனால், ஒரு வருடத்தில், அந்த இழந்த நேரங்கள் உங்கள் வாழ்க்கையில் 30 மணிநேரம் முதல் 5 நாள்கள் வரை பெருகலாம்.
நீங்கள் குறைவான பொருள்களை வைத்திருக்கும் போது, உங்களின் உடமைகளை எளிதாகக் கண்காணிக்கவும் ஒழுங்கமைக்கவும் முடியும்.
13. அதிக சுதந்திரம்
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், மினிமலிசம் உங்கள் உடைமைகளின் சுமையிலிருந்து விடுபடவும், உங்கள் சுதந்திர உணர்வை கணிசமாக மேம்படுத்தவும் உதவும்.
ஒருமுறை தங்களுடைய உடைமைகளால் கட்டுப்படுத்தப்பட்டு சுமையாக உணர்ந்த நபர்கள், குறைந்தபட்ச வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்த பிறகு, தங்கள் உடைமைகளின் அழுத்தத்திலிருந்து ‘விடுதலை’யை உணர்ந்ததாக ஓர் ஆய்வு காட்டுகிறது.
14. அதிக நேரம் மற்றும் நிறைய ஆற்றல்
மினிமலிச வாழ்வியலில் பொருள்களை நிர்வகிப்பதற்கு நீங்கள் குறைந்த நேரத்தையும் சக்தியையுமே செலவிடுவீர்கள், அதனால் வாழ்க்கையில் மிக முக்கியமானவற்றுக்கு நீங்கள் அதிக நேரத்தை அர்ப்பணிக்க முடியும்.
ஓர் ஆய்வில், மினிமலிஸ்டுகள் - குறிப்பாக குழந்தைகளுடன் இருப்பவர்கள் - அதிக அளவு குவாலிட்டி நேரத்தைப் பெறுவதாகக் கூறினர். ஏனெனில், அவர்களின் வாழ்விடங்கள் எளிமைப்படுத்தப்பட்டிருந்ததால் சுத்தம் மற்றும் ஒழுங்கமைத்தலுக்கு குறைவான நேரமே தேவைப்படுவது உறுதிசெய்யப்பட்டது. அதனால் அந்த நேரத்தை குழந்தைகளுடனும் உறவினர், நண்பர்களுடனும் நல்ல முறையில் செலவிட முடிகிறது. இந்த ஆய்வின் பங்கேற்பாளர்கள் மினிமலிசத்தின் நன்மையாக அதிக 'மன ஆற்றல்' இருப்பதாகவும் தெரிவித்தனர்.
15. சிறந்த உடல் மன ஆரோக்கியம்
ஒழுங்கான வீட்டை வைத்திருப்பது சிறந்த ஆரோக்கியத்திற்கான ரகசியங்களில் ஒன்று என்பது உறுதி. நெருக்கடியான வீடுகளைக் காட்டிலும், நேர்த்தியான வீடுகளைக் கொண்டவர்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
ஒருவரின் வீட்டின் நிலை உடல் செயல்பாடுகளை பாதிக்கிறதா அல்லது மக்கள் தங்கள் வீட்டை நேர்த்தியாக வைத்திருப்பதன் மூலம் உடல்ரீதியாக அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை, என்றாலும், தினம் தினம் தூசி மற்றும் குப்பைகளை அகற்றுவது உடலுக்கு நல்லது.
ஆகவே, மினிமலிச பாதையில் தொடர்வோம்... நிறைவை நோக்கிச் செல்வோம்!
from Latest news https://ift.tt/lMNxy5j
0 Comments