`பணத்துடன் ஆண் பிறப்பையும் இழந்தேன்’ - தன்பால் ஈர்ப்பு, பெண் ஆக அறுவை சிகிச்சை, கைவிட்ட இளைஞர்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரை சேர்ந்தவர் பவன் குமார். இவரும் விஜயவாடாவை சேர்ந்த நாகேஸ்வராவும் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரியில் ஒன்றாகப் படித்துள்ளனர். கல்லூரி நாள்களில் இருவரும் பிரிக்க முடியாத நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்த நெருக்கம் இருவருக்குள்ளும் தன்பால் ஈர்ப்பு பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். கல்லூரி முடிந்த பின்னரும் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றுகொண்டிருந்துள்ளது.

தன்பாலின ஈர்ப்பு

ஒரு கட்டத்தில் அவர்கள் திருமணம் பற்றி அவரவர் வீடுகளில் பேச்சுகள் வர, இருவரும் பிரிந்துவிடுவோமோ என பயந்துள்ளனர். இதற்குத் தீர்வாக அவர்கள், பவன் குமார் பெண்ணாக மாறுவது என்று முடிவெடுத்துள்ளனர்.

நாகேஸ்வரராவ், பவன் குமாரிடம் அன்பாகப் பேசி, அவர் டெல்லி சென்று ஆபரேஷன் செய்து தனக்காக பெண்ணாக மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். பவன் குமார் அப்படி பெண்ணாக மாறினால், தன் வீட்டில் பேசி இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்று கூறியுள்ளார்.

நாகேஸ்வரராவ் மீது இருந்த அதீத காதலால், அதை ஏற்றுக்கொண்ட பவன் குமார், மும்பைக்கு சென்று 11 லட்சம் ரூபாய் செலவு செய்து ஆபரேஷன் செய்து பெண்ணாக மாறியுள்ளார். உடல் ரீதியிலான போராட்டங்கள், மன உளைச்சல்கள் ஆகிய அனைத்தையும் கடந்து தன் இணையின் விருப்பப்படி பெண்ணாக மாறி ஆந்திரா வந்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் நாகேஸ்வரராவிடம் சென்று, தான் பெண்ணாக மாறியதால் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளக் கேட்டுள்ளார் பவன் குமார்.

வழக்கு

ஆனால் இதை மறுத்த நாகேஸ்வரராவ், ‘நீ அழகாக இல்லை. உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்ததோடு, ஆபாச வார்த்தைகளால் பவன்குமாரை திட்டி மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த பவன்குமார், மீண்டும் மீண்டும் நாகேஸ்வராவிடம் சென்று கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் பவன் குமாரிடம் சரிவர பேசாமல் அவரை தவிர்த்து வந்துள்ளார். இதற்கிடையே, இருவரும் தன்பால் ஈர்ப்பில் இருந்தபோது நாகேஸ்வரராவ், பவன் குமாரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 11 சவரன் நகை மற்றும் ரூ.26 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மன வேதனையடைந்த பவன்குமார், உடனடியாக மங்களகிரி போலீஸில் புகார் அளித்துள்ளார். ’என் நெருங்கிய நண்பனை நம்பி நகை, பணம் இழந்து, மற்றும் எனது பிறப்பையும் மாற்றி கஷ்டப்படுகிறேன். உடனடியாக நாகேஸ்வரராவை கைது செய்யுங்கள்’ எனக் கதறி அழுதுள்ளார். இவரின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் நாகேஸ்வரராவ் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தன் இணையருக்காக பணம், நகையை தாண்டி பிறப்பையும் மாற்றி ஏமார்ந்த நபரின் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from Latest news https://ift.tt/DNXJ6RO

Post a Comment

0 Comments