தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கீழக்கரந்தையைச் சேர்ந்த ராமர், அவரின் நண்பர் திருமேனி ஆகிய இருவரும் நேற்று இரவு மது அருந்திவிட்டு புதூர் பஜார் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவு உண்ணச் சென்றிருக்கின்றனர். இருவரும் சோ்ந்து 10 ஆம்லெட் சாப்பிட்டிருக்கின்றனர். ஆனால், பில் கொடுக்கும்போது, `5 ஆம்லெட்தான் சாப்பிட்டோம்' என்று கூறியிருக்கின்றனர். சப்ளை செய்தவர், ``ரெண்டு பேரும் ஆளுக்கு ஐந்து ஆம்லெட்னு மொத்தம் 10 ஆம்லெட் சாப்பிட்டிருக்கீங்க. மொத்தமே ஐந்து ஆம்லெட்தான்னு சொல்றீங்களேன்னு'' கேட்டிருக்கிறார்.
ஹோட்டலின் பெண் உரிமையாளரும் ``10 ஆம்லெட் சாப்பிட்டிருக்கீங்க. 10 ஆம்லெட்டுக்கு காசு கொடுங்க” எனச் சொல்லியிருக்கிறார். மதுபோதையில் இருந்த இருவரும் பெண் உரிமையாளரை ஆபாச வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர்ந்து ராமர் மற்றும் திருமேனி ஆகிய இருவரும் தொலைபேசியில் அழைத்ததன் பேரில் அதே தெருவைச் சேர்ந்த மாரீஸ்வரன், ராமர், பிரவீன்ராஜ் ஆகியோரும் ஹோட்டலுக்கு வந்திருக்கின்றனர்.
அவர்களும் மதுபோதையில் இருந்த நிலையில், ராமர் மற்றும் திருமேனி ஆகியோருக்கு ஆதரவாகப் பேசி ஹோட்டலிலுள்ள பொருள்களை ரோட்டில் வீசி தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது ஹோட்டல் அருகில் நின்றுகொண்டிருந்த எம்.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, நல்லதம்பி, சரவணன் ஆகியோர் ஹோட்டலில் ரகளை ஈடுபட்டவர்களிடம், `ஏன் தகராறு செய்கிறீர்கள்' என்று கேட்டிருக்கின்றனர். அப்போது இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் கட்டைகள் மற்றும் செங்கற்களால் மாற்றி மாற்றி தாக்கிக்கொண்டிருக்கின்றனர். இதில் காயமடைந்த மாரீஸ்வரன், ராமர் ஆகிய இருவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், பிரவீன்ராஜ் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தங்கப்பாண்டி, நல்லதம்பி, சரவணன் ஆகிய மூவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்ட ஆறு பேர்மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக புதூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். ஆம்லெட் பிரச்னையில் தொடங்கி அதைத் தட்டிக்கேட்ட மூன்று பேர் கைகலப்பில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest news https://ift.tt/CH2KilI
0 Comments