இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
``அண்ணாமலையின் இந்தக் கருத்து மிகவும் அபத்தமானது. பா.ஜ.க அரசின் மாபெரும் ஊழலை சி.ஏ.ஜி-யின் அறிக்கை புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. மத்திய அரசின் ஏழு திட்டங்களில், பெரும் முறைகேடுகளைத் திட்டமிட்டு பா.ஜ.க அரசு நிகழ்த்தியிருப்பதை அந்த அறிக்கையைப் படிக்கும் சாமானியர்கள்கூடப் புரிந்துகொள்ள முடியும். மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள், ராமாயணத்தின் பெயரைச் சொல்லி ஊழல் செய்திருக்கிறார்கள். துவாரகா சாலைத் திட்டத்தில் 1 கி.மீ சாலை அமைக்க 250 கோடி செலவானதாகக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். சுங்கச்சாவடியில் கோடிக்கணக்கில் முறைகேடாக வசூல் செய்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன், இறந்துபோன பொதுமக்களின் பெயரைச் சொல்லி, அவர்களுக்குச் சிகிச்சை அளித்ததாகச் சொல்லி, அதற்கு மருத்துவக் காப்பீடும் வழங்கியதாகப் பல கோடி ரூபாய் மக்கள் பணம் சுருட்டப்பட்டிருக்கிறது. ‘எங்கள்மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது சுமத்த முடியுமா..?’ என மார்தட்டிக்கொண்ட பா.ஜ.க-வின் ஊழல் முகத்தை சி.ஏ.ஜி அறிக்கை கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறது. அதற்கு பதில் சொல்ல துப்பில்லாமல், ‘அறிக்கையில், ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லவில்லை’ என மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.”
நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க
``ஆம், அண்ணாமலை சொன்னது சரிதான். சி.ஏ.ஜி அறிக்கையில், ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பு இல்லை. மத்திய அரசின் நிதிச் செலவினங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, கணக்கீடு செய்திருக்கிறது சி.ஏ.ஜி. உதாரணமாக, துவாரகா சாலை அமைக்கும்போது மேம்பாலங்கள், ஈரடுக்கு மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைத்ததோடு, 2 லட்சம் மெட்ரிக் டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதை சி.ஏ.ஜி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையிலான எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டத்தின் தூரம் 20 கி.மீதான். அதன் திட்ட மதிப்பு 5,721 கோடி ரூபாய். அப்படியானால் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.286 கோடிக்கு செலவு மதிப்பீடு ஆகும்தானே... அதை ஊழல் என்றா சொல்ல முடியும்... இது போன்று பல்வேறு குழப்பங்கள் சி.ஏ.ஜி அறிக்கையில் இருக்கின்றன. அதற்கான தகுந்த விளக்கத்தை சி.ஏ.ஜி-க்கு மத்திய அரசு அளிக்கும். எப்போதும் ஊழலைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள், `பா.ஜ.க எப்போது சறுக்கும்... அதைவைத்து ஊழல் பழி சுமத்திவிடலாம்’ என்று நினைக்கின்றன. மீண்டும் ஒரு முறை அவர்கள் ஏமாந்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்!”
- லெ.ராம் சங்கர்ஒனெ ஐ டுஇ
from Latest news https://ift.tt/qHpQ8Li
0 Comments