ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவர்கள் மாநாடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக மண்டபம் முகாம் அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மீனவர்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின், ``மீன்பிடித் தொழிலில் இந்தியாவின் ஐந்தாவது மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு மீனவர்கள் பங்களிக்கின்றனர். தி.மு.க ஆட்சிக்காலங்களில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். மீனவர் நல வாரியம், மீன்பிடித் தடைக்கால நிவாரணம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் ஆகியவை கலைஞர் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன.
கடந்த இரண்டாண்டுகளில் 42 மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் ரூ.431 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு, என்னால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதளங்கள், கடற்படை பாதுகாப்பு, அரசு மீன் பண்ணை மற்றும் அலுவலக கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் ரூ.1,296 கோடி மதிப்பில் நடந்து வருகின்றன. அதுபோக இன்று ரூ.88.90 கோடி மதிப்பீட்டில் 13,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவிருக்கின்றன. இவை அனைத்தும் இதுவரை செய்த சாதனைகள்.
தற்போது இந்த மீனவர் மாநாட்டில் பத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். தமிழக மீனவர்கள் 5,035 பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும். மீன்பிடி கூட்டுறவு கடனாக ரூ.45,000 வழங்கப்படும். மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-லிருந்து ரூ.8,000-மாக உயர்த்தப்படும். 60 வயதான மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். 1,000 நாட்டுப்படகுகளுக்கு 40 விழுக்காடு மானியம் வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் 3,400 லிட்டரிலிருந்து 3,700 லிட்டராக உயர்த்தப்படும். விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசல், 18,000 லிட்டரிலிருந்து 19,000 லிட்டராக உயர்த்தப்படும். விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் மானிய மண்ணெண்ணெய் 4,000 லிட்டரிலிருந்து 4,400 லிட்டராக உயர்த்தப்படும். தங்கச்சிமடம் மீன்பிடித் துறைமுகத்திலும், பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்திலும் மீன்பிடித் தூண்டில் வளைவு அமைக்கப்படும்.
மீனவர்களுக்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம் 250 குடும்பங்களுக்கு வழங்கப்படும். மீன்பிடி கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க, தடுப்புச் சுவர் அமைக்கப்படும். அறிவிக்கப்பட்ட இந்த புதிய திட்டங்களுக்கு ரூ.926 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது. கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் அளவிலான இந்த அறிவிப்புகளில் 2,77,347 மீனவர்கள் பயனடையவிருக்கின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதையும், கைதுசெய்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை தமிழர்கள் உரிமைப் போராட்டம் என்று தொடங்கியதோ, அப்போதிலிருந்து தமிழக மீனவர்களைத் தாக்குவதை இலங்கை அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. உரிமைப் போராட்டம் முடிந்த பிறகாவது தமிழ்நாட்டு மீனவர்களால் நிம்மதியாக மீன்பிடிக்க முடிகிறதா... முடியவில்லை. 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டப் பிறகு அடக்குமுறைகள் இன்னும் அதிகமானது. கைது, தாக்குதல், சிறைபிடிப்பு என்பதைத் தாண்டி, மீனவர்களின் பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகுகள் பறிமுதல் செய்யப்படுவது அதிகமாகிவிட்டது.
மீனவர்களை விடுவித்தாலும், படகுகளை விடுவிப்பதில்லை. படகுகளை உடைப்பதும், வலைகளை அறுப்பதும் இலங்கை அரசின் வழக்கமாக இருக்கிறது. இத்தகைய படகுகள் இலங்கை அரசின் அரசுடைமையாக்கப்படும் என அந்நாட்டு அதிபர் சொல்லும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பாம்பனில் பா.ஜ.க சார்பில் கடல் தாமரை எனும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் மறைந்த சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார். அப்போது ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனப் பேசினார்.
இந்த ஒன்பது ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் அது நடந்ததா... அதேபோல் 2014-ல் ராமநாதபுரத்துக்கு வந்த பிரதமர் மோடியும், `தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்பப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தினசரி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்' எனப் பேசினார். கடந்த ஒன்பது ஆண்டுக்கால பா.ஜ.க-வின் ஆட்சியில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படவே இல்லையா... மீனவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமென்றால், இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டும். `மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கிறேன்' என குமரியில் பேசினார் பிரதமர் மோடி. அவருடைய சபதத்தை நிறைவேற்றினாரா... நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட உயிரிழக்கமாட்டார்.
`தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசால் பிரச்னை, குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்னை, இரண்டு மாநில மீனவர்களை இணைத்துக் கூட்டு நடவடிக்கை எடுப்போம்' எனச் சொன்னவர் நரேந்திர மோடி.
அதன் பிறகு 2015-ம் ஆண்டும் தாக்குதல் நடந்தது, 2016-ம் ஆண்டு தாக்குதல் தொடர்ந்தது. 2017-ல் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலைசெய்யப்பட்டார். தொடர்ந்து தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்யக்கூடிய நிலையிலும், தமிழக மீனவர்கள்மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான், அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். 2020 முதல் இன்று வரை தமிழ்நாட்டு மீனவர்கள்மீது இலங்கை கடற்படை 48 முறை தாக்குதல் சம்பவங்களை நடத்தியிருக்கின்றனர். இதில் தமிழகம் மீனவர்கள் 619 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 83 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 74 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அதில் 59 பேரை விடுவித்திருக்கின்றனர். அவர்களது 67 மீன்பிடிப் படகுகள் இன்னும் இலங்கை அரசிடம்தான் இருக்கின்றன.
பிரதமர் மோடி ஆட்சியில் தாக்குதல்கள் தொடரவே செய்கின்றன என்றால், மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என அர்த்தம். தமிழக-இலங்கை மீனவப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றால், கச்சத்தீவை மீட்க வேண்டும். பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போதெல்லாம் நான் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன்.
ஆனால் இங்குள்ள சிலர், `இதற்கெல்லாம் காரணம் தி.மு.க ஆட்சி காலத்தில்தான் கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர்' என வரலாறு தெரியாமல் உளறுகின்றனர். இலங்கை அரசு கச்சத்தீவை சொந்தம் கொண்டாடியபோது, அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கச்சத்தீவு நம்முடையதுதான் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, 1974-ல் வெளியிட்டார். அதனை மீறித்தான் இந்த ஒப்பந்தமானது போடப்பட்டது. இது ஒப்பந்தம்தானே தவிர சட்டம் அல்ல. அப்படி எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதனை தி.மு.க-வும் ஆதரிக்கவில்லை. கச்சத்தீவை தரக் கூடாது என இந்திரா காந்தியைச் சந்தித்து கலைஞர் வலியுறுத்தினார்.
கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி இந்திய அரசுக்கு கொடுத்ததே கலைஞர்தான். இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்ததன் மூலமாக இந்தியாவைக் காட்டிலும் தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் பேசினார். இரா.செழியன் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பைப் பதிவுசெய்து வெளிநடப்பு செய்தார். ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாள், முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்து, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்துசெய்தாக வேண்டும் எனக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டது.
அனைத்து கட்சிகளும் ஆதரித்த அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க-தான். அன்று முதல் இன்று வரை ஒரே விஷயத்தை தெளிவாகச் செய்கிறார்கள். அது என்னவென்றால், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் கலைஞர். கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் தி.மு.க சார்பில் கூட்டங்கள் நடத்தி பேசப்பட்டது. இந்த வரலாறுகள் எதுவுமே தெரியாமல் மாநில அரசான தி.மு.க இந்தியாவின் ஒரு பகுதியை தாரைவார்த்துவிட்டதாக அடிப்படை அறிவு இல்லாமல், குறைந்தபட்ச நேர்மை இல்லாமல் சிலர் பேசுகிறார்கள் என்பது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. எனவே இந்திய அரசு இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்வதற்கான வேலையை இப்போதாவது ஒன்றிய அரசு தொடங்க வேண்டும்.
பா.ஜ.க அரசு இந்த முயற்சியில் இறங்கவில்லை என்றால், அடுத்து நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அமைய இருக்கக்கூடிய புதிய அரசு, இதனை நிறைவேற்றும். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைக் காப்போம், மீனவர்களின் நலனைக் காக்கும் அரசாக தி.மு.க இருக்கும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து மீனவர்களுக்கு ரூ.88 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 17-ம் தேதி பாக முகவர்கள் கூட்டம் முடிந்து இரவு ராமேஸ்வரத்தில் தங்குவதற்காகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செல்லும் வழியில் அக்காள்மடம், தங்கச்சிமடம் பகுதிகளிலுள்ள மீனவர்கள் குடியிருப்புக்குச் சென்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். அதேபோல் மீனவர்கள் மாநாடு முடிந்து ராமநாதபுரத்துக்குச் செல்லும்போது பேய்க்கரும்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from Latest news https://ift.tt/b4Mm9xD
0 Comments