"மோடி ஓர் உத்தரவாதம் கொடுத்தால் அதை நிறைவேற்றிக் காட்டுவார்" என்ற பிரதமரின் கருத்து? - ஒன் பை டூ

செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்

``வெறும் பொய் புரட்டுகளைப் பேசி, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்தவர் மோடி. இந்த ஒன்பது ஆண்டுகளில் பா.ஜ.க., சொன்ன ஒரு தேர்தல் வாக்குறுதியையாவது நிறைவேற்றியிருக்கிறதா... `இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்’ என்றார்கள். அதற்கு நேர்மாறாக இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் மொத்தமாக நசுக்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை வேலையிழந்து தெருவில் நிற்கவைத்திருக்கிறது பா.ஜ.க அரசு. அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போட்டார்களா... `பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும்’ என்றார்கள், செய்தார்களா... இப்படி, சொல்லிவிட்டு மறந்துபோன விஷயங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். பா.ஜ.க அரசு செய்ததெல்லாம் அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றதும், நாடெங்கும் மத, இனக் கலவரங்களைத் தூண்டிவிட்டதும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் சிதைத்ததும்தான். வரிகளின் பெயரால் மக்களைச் சுரண்டி, அரசின் கஜானாவுக்கு பதிலாக அதானியின் கஜானாவை நிரப்பியிருக்கிறார் மோடி. மணிப்பூர் விவகாரத்தில் உலக அரங்கில் இந்தியாவுக்கு மாபெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது பா.ஜ.க அரசு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை மக்கள் தூக்கி எறிவார்கள்.’’

செல்வப்பெருந்தகை, நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``பிரதமர் சொன்னது மிகச் சரியானது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் `அனைவருக்கும் வீடு, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்வேன்’ என்று சொல்லியிருந்தார் மோடி. சொன்னதுபோலவே, இந்த நான்கு அத்தியாவசியத் தேவைகளையும், அனைத்து மக்களிடமும் மிகத் தாராளமாகக் கொண்டு சேர்த்திருக்கிறார். இந்த ஆட்சிமீது மக்களுக்குப் பெரும் நம்பிக்கை இருந்ததால்தான், 2019 தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவர முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார். நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. கொரோனா பேரிடருக்குப் பிறகும் இந்தியாவின் வளர்ச்சியைப் பல உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து தொழில்கள் தொடங்குகிறார்கள். தனிநபர் வருமானம் அதிகரித்திருக்கிறது. பா.ஜ.க அரசின்மீது ஒரேயோர் ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லை. வரும் 2024-ம் ஆண்டு தேர்தலிலும் முன்பைவிட அதிகமான இடங்களில் பா.ஜ.க மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.’’



from Latest news https://ift.tt/gJyGQFX

Post a Comment

0 Comments