ஒன் பை டூ: ``உண்மையில் நீட் விவகாரத்தில் தவறு செய்தது யார்?"

பாபு முருகவேல், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

``தி.மு.க-தான். 2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மத்திய சுகாதார இணை அமைச்சராக இருந்தவர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் காந்திசெல்வன். நாடாளுமன்றத்தில் அவர்தான் நீட் மசோதாவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மா ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்பட்டது. ஆனால், `உச்ச நீதிமன்றம் ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்வு விலக்கு தர முடியாது’ என்று உத்தரவு வழங்கியதை அடுத்தே தமிழகத்துக்கு விலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த வழக்கில் நீட்டுக்கு ஆதரவாக வாதாடியது காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி என்பது ஊரறிந்த உண்மை. இப்படி நீட்டை கொண்டுவருவதற்கான வேலைகள் அனைத்தையும் தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியுமே முன்னின்று நடத்தின. ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வை ரத்துசெய்யத் தேவையான அனைத்துச் சட்டப் போராட்டங்களையும் எடப்பாடியார் தலைமையிலான அரசு முன்னெடுத்தது. தேர்தலுக்காக, `நீட் தேர்வை நாங்கள் ரத்துசெய்துவிடுவோம்’ என்று பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றியது தி.மு.க-வினர்தான்.’’

பாபு முருகவேல், இராஜீவ் காந்தி

இராஜீவ் காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க

``அ.தி.மு.க-தான். காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டிருந்தாலும், மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தலைவர் கலைஞர், அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரையிலும் நீட் தேர்வுக்கான விலக்கைத் தமிழ்நாடு பெற்றிருந்தது. ஆனால், பழனிசாமி அரசின் கையாலாகாத்தனமும், ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் அடிபணிந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் போன்றோரின் திறமையின்மையுமே தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு வரக் காரணம். சட்டப் போராட்டத்திலும் படுதோல்வி அடைந்தது பழனிசாமி அரசு. ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே குழு அமைத்து, அந்தக் குழு அளித்த விரிவான அறிக்கையின் அடிப்படையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட அனைவரிடமும் நீட் தேர்வு ரத்து குறித்துக் கடிதம் எழுதியதோடு, நாடாளுமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருகிறோம். அனைத்துத் தடைகளையும் மீறி, சட்டபூர்வமாக நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தி.மு.க முன்னெடுத்துவருகிறது. ஆனால், இரட்டை வேடம் மட்டுமே போட்டுக்கொண்டு வெறும் வாய்ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.’’



from Latest news https://ift.tt/M63F8Jp

Post a Comment

0 Comments