Doctor Vikatan: என் தோழியின் 8 மாதக் குழந்தைக்கு தலசீமியா பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாதந்தோறும் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். குழந்தையின் எதிர்கால வளர்ச்சி குறித்து என் தோழி மிகுந்த கவலையில் இருக்கிறாள். அந்தப் பெண் குழந்தைக்கு உடல் வளர்ச்சி சீராக இருக்குமா... எல்லோரையும்போல இயல்பான வாழ்க்கை வாழ முடியுமா என்று பயப்படுகிறாள். இது குறித்து விளக்க முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா
தலசீமியா என்பது குழந்தைப்பருவத்திலேயே பாதிக்கும் பிரச்னை. ரத்தம் உடையும் தன்மை காரணமாக இந்தக் குழந்தைகளுக்கு பிறந்த 6-வது மாதம் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும், அதாவது 21 முதல் 35 நாள்களுக்கொரு முறை ரத்தம் ஏற்றிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.
அப்படி ரத்தம் ஏற்றப்பட்டால் அவர்கள் சாதாரண குழந்தைகளைப் போலவே வளர்வார்கள், பெரியவர்களாவார்கள். அவர்களும் திருமணம் செய்துகொள்ளலாம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம், வேலைக்குச் செல்லலாம்.. இப்படி இயல்பான எல்லா வேலைகளையும் அவர்களால் செய்ய முடியும்.
ஒருவேளை இப்படி ரத்தம் ஏற்றாவிட்டால் அவர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவானது 7-க்கு கீழே இருக்கும். சில நேரங்களில் அது 5-ஐவிட குறையவும் வாய்ப்பு உள்ளது. அதனால் குழந்தையின் வளர்ச்சி குன்றிப்போகும். ஒரு வயது, இரண்டு வயது வரைகூட குழந்தை உயிரோடு இருக்க முடியாத நிலை ஏற்படலாம். குறைவாக ரத்தம் ஏற்றப்பட்டாலும் வளர்ச்சி குன்றுவதுடன், மண்ணீரல், கல்லீரல் எல்லாம் வீங்கி, வயிறு பெருத்துக் காணப்படுவார்கள்.
இன்றைய சூழலில் தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றும் இந்தச் சிகிச்சையானது அரசின் ஆதரவோடு மக்களுக்கு எளிதில் கிடைக்கிறது.
ஆனால் மாதந்தோறும் ரத்தம் ஏற்றுவதால் இரும்புச்சத்து மிகுதி என்ற பிரச்னை ஏற்படுகிறது. அதாவது பத்து முறை ரத்தம் ஏற்றப்போகிறோம் என்றால் பதினோராவது முறையிலிருந்து இரும்புச்சத்தை வெளியேற்றும் மாத்திரைகள் கொடுக்க வேண்டியிருக்கும். இதை நாமாக வாங்கி குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாது. தலசீமியா பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டியவை.
எனவே, உங்கள் தோழியின் குழந்தைக்கு முறையாக ரத்தம் ஏற்றப்படும் பட்சத்தில் வளர்ச்சி பாதிப்போ, பிற்கால வாழ்க்கை பாதிப்போ ஏற்பட வாய்ப்பில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest news https://ift.tt/uc8kBi0
0 Comments