ஆன்லைன் மோசடிகள் விதவிதமாக நடக்கின்றன. வீட்டில் இருப்பவர்கள் பகுதி நேரமாகச் சம்பாதிக்கலாம் என்று கூறி வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி, அதில் சிக்குபவர்களிடம் பணத்தை மோசடி செய்துவிடுகின்றனர். மும்பையில் சமீபகாலமாக யூடியூப் வீடியோ பார்த்து, `லைக் பண்ணுங்கள், சம்பாதியுங்கள்’ என்று ஆன்லைன் மோசடித் திட்டத்தை அறிவித்து, மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இந்த மோசடியில் சிக்கிய மும்பையைச் சேர்ந்த 38 வயது பெண் 13 லட்சம் ரூபாயை இழந்துவிட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இதில் கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்இ டிரைவர் சித்தார்த் சாட்டர்ஜி என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சித்தார்த்துக்கு துபாயைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. துபாயைச் சேர்ந்தவர்கள்தான் இந்த மோசடியில் மூளையாகச் செயல்பட்டுள்ளனர். டெலிகிராமைப் பயன்படுத்தி, இது போன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து சைபர் பிரிவு இன்ஸ்பெக்டர் நிதின் கூறுகையில், ''கைதுசெய்யப்பட்டிருக்கும் சாட்டர்ஜி இந்தியாவிலுள்ள வங்கிக் கணக்குகளைக் கையாண்டிருக்கிறார். மோசடி மூலம் பெறப்படும் பணத்தைப் பெற, இந்தியாவில் வசதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்களது அனுமதியோடு அவர்களின் வங்கிக் கணக்கை துபாயில் இருக்கும் மோசடியாளர்களிடம் கொடுத்திருக்கிறார். மொத்தம் 35 வங்கிக் கணக்குகளைக் கொடுத்திருக்கிறார். அந்த வங்கிக் கணக்குக்கு வரும் மோசடிப் பணத்தை துபாயில் இருப்பவர்கள் தங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொள்கின்றனர். அது போன்ற பல வங்கிக் கணக்குகளை முடக்கியிருக்கிறோம்.
10 சிம் கார்டுகள், 10 ஏ.டி.எம் கார்டுகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சாட்டர்ஜி ஒரு வங்கிக் கணக்குக்கு ரூ.30 முதல் 35 ஆயிரம் கமிஷனாகப் பெற்றிருக்கிறார். அதோடு, சாட்டர்ஜி இந்தியாவில் நடக்கும் மோசடிகளுக்கு துபாயில் இருப்பவர்களின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்திருக்கிறார்'' என்றார். துபாய் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பவர்களும் இந்தியாவில் இது போன்ற மோசடியில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
from Latest news https://ift.tt/95w7sub
0 Comments